காரைக்குடியில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா: 2024 விழிப்புணர்வு பேரணி…

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா 2024 கடந்த மாதம் 15.01.2024 முதல் 14.02.2004 வரை தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழா நிறைவை முன்னிட்டு தலைக்கவசம்,சீட் பெல்ட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விழிப்புணர்வு பேரணிக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். காரைக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் கலையரசி முன்னிலை வகித்தார். உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐ.பி.எஸ் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தேவர் சிலை அருகே துவஙகிய இப்பேரணி பெரியார் சிலை, அம்பேத்கர் சிலை, ராஜீவ்காந்தி சிலை, கல்லூரி சாலை வழியாக வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகம் அருகே நிறைவுற்றது.

பேரணி வரும் வழியில் சாலையில் தலைக்கவசம் அணிந்தும்,சீட் பெல்ட் அணிந்தும் வந்த பொதுமக்களை பாராட்டி திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.
200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இப்பேரணியின் நிறைவாக அலுவலகத்தில் வாகன ஓட்டுநர்களுக்கும்,பொதுமக்களுக்கும் இலவச கண் சிகிச்சை முகாம் மருத்துவர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

இதில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சித்ரா, சார்பு ஆய்வாளர்கள் பிரணிதா,அருண் முரளி,போக்குவரத்து கழக தொழில்நுட்ப பிரிவு துணை மேலாளர் நலங்கிள்ளி,போக்குவரத்து கழக ஓட்டுநர் பயிற்சி பாசறை மேலாளர் சொக்கலிங்கம்,தனியார் பேரூந்துகள் சங்க தலைவர் நாச்சியப்பன் உள்பட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள்,ஓட்டுநர்கள்,அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்