டெல்லி நோக்கி மீண்டும் விவசாயிகள் பேரணி சாலைகளில் தடுப்பு வேலி..

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குறிப்பாக பஞ்சாப்,அரியானா, உத்திரபிரதேஷ் விவசாயிகள் டெல்லி சலோ என்ற பெயரில் மீண்டும் டெல்லி நோக்கி மாபெரும் பேரணியாக புறப்பட்டு வருகின்றனர்.
3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி 2 ஆண்டுகளுக்கு முன் விவசாயிகள் டெல்லி நோக்கி சென்று போராட்டம் நடத்தினர் இதில் 800 விவசாயிகள் மாண்டனர். ஒன்றிய அரசும் வேளாண் சட்டங்களை நிறுத்திவைத்தது.
தற்போது விவசாய விளைப் பொருட்களின் குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு ஒன்றிய அரசு சட்டரீதியான உத்தரவாதங்களை வழங்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக ஒன்றிய அரசுடன் பல தரப்பட்ட பேச்சு வார்த்தை நடத்தி அவை அனைத்தும் தோல்வியில் முடிந்ததால் டெல்லி நொக்கி விவசாயிகள் தற்போது பேரணியாக செல்கின்றனர்.
விவசாயிகளின் கோரிக்கை

🔹விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தல்

🔹குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குதல்

🔹2013 நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது, விவசாயிகளிடமிருந்து எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெறவும், கலெக்டர் விகிதத்தை விட நான்கு மடங்கு இழப்பீடு வழங்குதல்

🔹2021 லக்கிம்பூர் கெரி கொலைகளின் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குதல்

🔹உலக வர்த்தக அமைப்பிலிருந்தும் (WTO), பிற நாடுகளுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் இருந்தும் அரசு விலகுதல்

🔹விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்

🔹மின்சாரத் திருத்த மசோதா 2020 ரத்து செய்தல்

🔹மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்பின கீழ் ஆண்டுக்கு 200 (100 நாட்களுக்குப் பதிலாக) நாட்கள் வேலை வாய்ப்பு, தினசரி ஊதியம் ரூ. 700 வழங்குதல். போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேரணியாக டெல்லி நோக்கி வந்து கொண்டுள்ளனர்.
டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி நடத்திவரும் நிலையில், டெல்லியின் பவானா மைதானத்தை ஒன்றிய அரசு திறந்த வெளி சிறைச்சாலையாக மாற்ற பரிந்துரை செய்ததை டெல்லி மாநில அரசு நிராகரித்தது.
டெல்லி முழுவதும் அடுத்த மாதம் மார்ச் 12-ம் தேதி வரை 144-வது சட்டப்பிரிவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லி செல்லும் சாலைகளில் முட்கம்பிகள்,சிமென்ட் தடுப்புகள்,ஆணிகளை பொருத்தி அனைத்து வழிகளிலும் தடை ஏற்படுத்தியுள்ளனர்.