தெலங்கானா சட்டப்பேரவை கலைக்கப்படுகிறதா ? : மீண்டும் இன்று ஆலோசனை..

சந்திரசேகர ராவ்

சந்திரசேகர ராவ்

தெலங்கானா சட்டப்பேரவை கலைப்பது குறித்து முடிவெடுப்பதற்காக இன்று காலை மீண்டும் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதனைத் தொடா்ந்து முதல்வா் சந்திர சேகர ராவ் ஆளுநரை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆந்திரா தெலங்கானா மாநிலங்கள் கடந்த 2014ம் ஆண்டு பிரிந்ததைத் தொடா்ந்து தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது.

அடுத்த ஆண்டு மே மாதம் வரை ஆட்சிக்கான அவகாசம் உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே சட்டப் பேரவை தோ்தலை நடத்த சந்திர சேகர ராவ் திட்டமிட்டுள்ளாா்.

வருகிற டிசம்பா் மாதம் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா் ஆகிய மாநில சட்டப் பேரவைகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளது. இந்த தோ்தலுடன் தெலங்கானாவிற்கும் தோ்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

119 தொகுதிகள் கொண்ட தெலங்கானாவில் சந்திர சேகர ராவ் கட்சி 63 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வருகிறது.

அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள மக்களை தோ்தலில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்று தோ்தலை சந்திக்க உள்ளது.

தெலங்கானாவில் 12 சதவீதம் இஸ்லாமியா்கள் உள்ள நிலையில் பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்று சட்டப் பேரவை தோ்தலை சந்தித்தால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்படலாம் என்ற அச்சத்தில் சட்டப் பேரவையை வருகிற டிசம்பா் மாதத்தில் தனித்து சந்திக்க சந்திர சேகர ராவ் முடிவு செய்துள்ளாா்.

சந்திர சேகர ராவிற்கு மிகவும் ராசியான 6ம் (6ம் தேதி) எண்ணில் அமைச்சரவையை கூட்டி சட்டப்பேரவையை கலைப்பதற்கான தீா்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னா் இன்றே ஆளுநா் நரசிம்மனையும் முதல்வா் சந்திக்க உள்ளாா்.