சென்னையில் தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.
மேலும் 4 மாதங்களுக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கவும் அனுமதி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களின் அத்தியாவசியத் தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என திமுக உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை செயல்பட 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதிக்கலாம் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கக்கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசே ஆக்சிஜன் உற்பத்தி பிரிவை ஏற்று நடத்தினால் என்ன?’ என்று கேள்வி எழுப்பியது. இந்த நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாமா என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை 9.15 மணியளவில் அனைத்து கட்சி கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் தொடங்கியது.
இந்த நிலையில், ஆலோசனையின் போது, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கலாம் என திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன.
ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டால் தென் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தான் தயாரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க அனைத்துக் கட்சி குழு அமைக்கலாம் என்றும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தவிர வேறு செயல்பாடுகளுக்கு மின்சாரம் தரக்கூடாது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
இதனிடையே அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல, மூடியதே தமிழக அரசுதான்.ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் செயல்பட 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கலாம்.
ஆக்சிஜன் உற்பத்தியை உள்ளூர் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு அமைத்து கண்காணிக்கப்படும்,’ எனத் தெரிவித்துள்ளார்.