கனடா பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை: திமுக ரூ.10 லட்சம் நிதியுதவி..

கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என, மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப். 26) வெளியிட்ட அறிக்கை:
“அன்னைத் தமிழ்மொழிக்கு உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டு, ஆங்காங்கே வாழும் தமிழர்கள் மொழித் தொண்டாற்றி வருகிறார்கள். அவர்களின் சீரிய முயற்சிக்குத் திமுக தொடர்ந்து நிதியுதவி அளித்து, தமிழ்மொழியின் புகழும், பெருமையும் உலகெங்கும் பரவிடத் தொய்வின்றி பணியாற்றி வருகிறது.

கனடா நாட்டில் உள்ள ரொறொன்ரோப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உருவாக வேண்டுமென்ற ஆர்வத்தோடு, கனடா வாழ் தமிழர்களும், உலகெங்கிலும் வாழும் தமிழர்களும் முயற்சி செய்து வருவதாகவும், அதற்குத் திமுகவின் சார்பில் நிதியுதவி தந்திட வேண்டுமென்றும் கனடியத் தமிழர் பேரவை நிறைவேற்று இயக்குநர் டன்ரன் துரைராஜா கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி, எத்திக்கிலும் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் மொழிச் சிறப்புக்கும் என்றென்றும் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டு வரும் திமுகவின் சார்பில், கனடா ரொறொன்ரோப் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்கு ரூ.10 லட்சம் (பத்து லட்சம் ரூபாய்) நிதியுதவி வழங்கப்படுகிறது.

செம்மொழித் தமிழின் சிறப்பு எங்கெங்கும் பரவட்டும் – இளைஞர்களின் தாய்மொழித் தாகத்தைத் தீர்க்கட்டும்!”.

இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.