“2-ம் கட்ட சென்னை மெட்ரோ பணிகளுக்கு மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை” : முதல்வர் ஸ்டாலின்…

“சென்னை முழுவதும் மெட்ரோ பணிக்காகச் சாலைகள் தோண்டப்பட்டு, பணிகள் மெதுவாக நடக்கிறதே அதற்கு என்ன காரணம்? மத்திய பாஜக அரசு ஒரு பைசா கூட பணம் தராததுதான். அப்படியும் பணிகளை முடித்தாக வேண்டுமே, திட்டத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டுமே என்று மாநில அரசே நிதிச்சுமையை ஏற்றுக்கொண்டு பணிகளைச் செய்து கொண்டு இருக்கிறோம். இதனால், நம் அரசுக்கு ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாகச் செலவாகிறது.”, என்று திருவள்ளூரில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று (ஏப். 15) திருவள்ளூர் மாவட்டம் மஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் திருவள்ளூர் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், வட சென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமி ஆகியோரை அறிமுகப்படுத்தி இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டு உரையாற்றினார். அவர் பேசுகையில், “இதுவரை நீங்கள் எத்தனையோ தேர்தல்களைப் பார்த்திருக்கலாம். பல இளைஞர்களுக்கு இது முதல் தேர்தலாக இருக்கலாம். ஆனால், இது சற்றே மாறுபட்ட தேர்தல். மிக மிக முக்கியமான தேர்தல்.
ஏன் என்றால், இந்த தேர்தலில் நீங்கள் போடும் வாக்குதான் இந்தியாவில் இனி ஜனநாயகம் இருக்கவேண்டுமா அல்லது சர்வாதிகாரம் இருக்கவேண்டுமா? அதுபோன்று, இந்தியாவில் அம்பேத்கர் எழுதிய சட்டம் இருக்கவேண்டுமா அல்லது ஆர்எஸ்எஸ் எழுதும் சட்டம் இருக்கவேண்டுமா? இடஒதுக்கீடுமுறை இருக்கவேண்டுமா அல்லது வேண்டாமா? எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக சேர்ந்து வாழவேண்டுமா – வாழக்கூடாதா? இதையெல்லாம் முடிவு செய்யப்போகும் தேர்தல். உங்கள் வாக்குதான் அந்த முடிவை தீர்மானிக்கப் போகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, நாம் ஏன் “வேண்டாம் மோடி” என்று சொல்கிறோம் என்றால், அவர் இரவுகளில் கொண்டுவரும் சட்டங்களால், தீடீர் என்று ஒரு இரவில்தான், ஊழலை ஒழிக்க வந்த அவதாரப் புருஷராக டிவி முன்பு தோன்றி, பணமதிப்பு இழப்பை அறிவித்தார். இரவில் பல மக்களை ஏடிஎம் வாசலில் நிற்க வைத்தார். அதேபோன்று ஒரு இரவில்தான், பெரிய பொருளாதாரப் புலி போன்று, GST சட்டத்தை அமல்படுத்தி, தொழில் முனைவோரையும் நடுத்தர வர்க்க மக்களையும் கொடுமைப் படுத்தினார். எவ்வளவு பேர் தற்கொலை செய்துகொண்டனர்.கரோனா வந்தப்போது என்ன செய்தார்? “இரவெல்லாம் எல்லாரும் மணி அடியுங்கள், விளக்கு ஏற்றுங்கள், கரோனா ஒழிந்துவிடும்”என்று பெரிய ‘சயிண்டிஸ்ட்’ போன்று பேசினார். இன்னும் நிறைய இருக்கிறது. அதனால்தான், நாங்கள் தொடர்ந்து சொல்கிறோம், பாஜகவும், பிரதமர் மோடியும் வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு.

பிரதமர் மோடி இரவுகளில் அறிவித்த அறிவிப்புகளை எல்லாம் மாற்றி, இந்தியாவில் விடியலை ஏற்படுத்தத்தான், இண்டியா கூட்டணியை அமைத்திருக்கிறோம். அதனால்தான், எனது அன்புச் சகோதரர் ராகுல்காந்தி கோவை வந்தபோது, “ராகுல் அவர்களே வருக, புதிய இந்தியாவுக்கு விடியல் தருக”என்று கூறினேன். மக்களைச் சந்தித்து, மக்களோடு மக்களாக இருந்து, அவர்கள் பிரச்சினைகளை முழுமையாகத் தெரிந்துகொண்டு திமுகவும் – காங்கிரஸ் கட்சியும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறோம். தெற்கிலிருந்த நம்முடைய குரல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக எதிரொலித்திருக்கிறது.

இப்படி, திமுக – காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கைகள் இந்தத் தேர்தலின் “ஹீரோ” என்றால், பாஜக வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் “வில்லன்”.பாஜகவின் தேர்தல் அறிக்கையை வில்லன் என்று ஏன் சொல்கிறோம் என்றால், மத அடிப்படையில் இந்த நாட்டுமக்களை பிளவுபடுத்தும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கிறார்கள்.
நாட்டுக்கு வரப்போகும் மிகப்பெரிய ஆபத்துக்கான டிரெய்லர்தான், பொது சிவில் சட்டம். மக்களைப் பிளவுபடுத்துவது மட்டுமல்ல, ஏமாற்றும் தேர்தல் அறிக்கையாகவும் பாஜக தேர்தல் அறிக்கை இருக்கிறது. ஒரு ரூபாயில் சானிட்டரி நாப்கின் வழங்கப் போகிறோம் என்று 2019 தேர்தல் அறிக்கையில் கூறியதை, மறுபடியும் காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார்கள். ஆனால், உண்மையில், நாப்கினுக்கு ஜிஎஸ்டி போட்டதுதான் பாஜக ஆட்சி. அந்த வரியை நீக்க நாடாளுமன்றத்தில் நம்முடைய எம்.பி.க்கள்தான் குரல் கொடுத்தார்கள், போராடினார்கள்.

அதுமட்டுமல்ல, இன்றைக்கும் விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராடிக்கொண்டு இருக்கிறார்களே, அவர்களுக்கு ஏதாவது வாக்குறுதி அறிவித்திருக்கிறார்களா? இல்லையே. விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவோம் என்று கூறினார்கள். அதை முதலில் செய்தார்களா? இல்லை. பாஜகவிடம் பத்தாண்டுகள் சாதனை என்ற சொல்லவும் எதுவும் இல்லை. அடுத்து செய்யப்போகிறோம் என்று சொல்ல சரியான வாக்குறுதியும் இல்லை.
இந்த இந்தியத் துணைக் கண்டத்தில், மறைந்த பிரதமர் நேரு தொடங்கி மோடி வரைக்கும், 14 பேர் பிரதமராக இருந்திருக்கிறார்கள். ஆனால், இப்போது இருக்கும் பிரதமர் மோடி போன்று, ED,IT,CBI-யை வைத்து மிரட்டிக் கட்சியை உடைக்கிறது, எம்.எல்.ஏ, எம்.பி.க்களை வாங்குவது, முதல்வர்களைக் கைது செய்வது, தொழிலதிபர்களை மிரட்டித் தேர்தல் பத்திரம் வாங்குவது., பி.எம். கேர்ஸ் என்று தனியார் அறக்கட்டளை வைத்து நிதிவாங்குவது என்று, வசூல் செய்த ஒரே வசூல்ராஜா மோடி ஒருவர்தான்.

வாயைத் திறந்தாலே சாதி , மதம் என்று மக்களைப் பிளவுபடுத்தித்தான் பேசுகிறார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல், முஸ்லீம் லீக்கின் அறிக்கை என்று விமர்சித்து, பிரிவினைவாதம் பேசினார். இப்போது, இன்னும் கீழே இறங்கிச் சென்று, மற்றவர்கள் உண்ணும் உணவை விமர்சிக்கிறார். பதவியில் தொடர முடியாது என்ற வெறியில், பிரிவினைப் பேச்சில் ஈடுபட்டிருக்கிறார். உணவு என்பது தனிநபர்களின் விருப்பம். அடுத்த மனிதர் என்ன சாப்பிடவேண்டும் என்று முடிவு செய்ய மோடிக்கு மட்டுமல்ல, யாருக்குமே உரிமையில்லை.

இப்படியெல்லாம், ஒரு பிரதமர் பேசுவாரா? வாக்குக்காக இப்படி மலிவான அரசியல் செய்யும் மனிதரை இந்திய வரலாறு இதுவரை பார்க்கவில்லை. அதனால்தான் கூறினேன். பாஜக இந்த நாட்டுக்கு வில்லன். நாட்டில் இருக்கும் எந்தப் பிரச்சினையையும் தீர்க்காமல் சுய விளம்பரத்துக்கு மட்டும்தான், பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்தார்.

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதி கொடுத்தாரே, ஆனால், இன்றைக்கு என்ன நிலைமை? வேலைவாய்ப்பு இல்லாமல் தவிப்பவர்களில் 83 விழுக்காடு பேர் இளைஞர்கள் என்று புள்ளிவிவரம் சொல்கிறது. நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்திய MSME நிறுவனங்கள் ஜிஎஸ்டியால் நலிவடைந்துவிட்டதே, அதைச் சரி செய்ய வேலை செய்தாரா? இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது, தாக்கப்படுவது, அதிகமானதே அதைட்க் தடுக்காமல், விஷ்வகுரு என்று சொல்லிக்கொள்ளும் பிரதமர் மோடி ஏன் மவுனகுருவாக இருந்தார்.

தேர்தலுக்காகத் தமிழ்கத்துப் பக்கம் தலையைக் காமிக்க வேண்டுமே, தமிழகத்துக்கு சொல்வதற்கு என்று ஒரு சிறப்புத் திட்டமாவது செய்திருக்கிறாரா, ஒரு செங்கல்லைக் காட்டி கேள்வியாகக் கேட்கிறார்களே, அந்த எய்ம்ஸ் மருத்துவமனையையாவது தேர்தலுக்கு முன்னால் கட்டிமுடித்துவிடுவோம் என்று எண்ணம் வந்ததா?

சரி அட்லீஸ்ட், என்னடா தமிழக மக்கள் பெருவெள்ளத்தில் தவிக்கிறார்களே, உயிரையும் உடைமைகளையும் வீடுகளையும் இழந்து அவஸ்தைப்படுகிறார்களே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவேண்டும் என்று மாநில அரசு நிதி கேட்கிறார்களே, மாநில முதல்வரே நேரில் வந்து, கோரிக்கை வைத்துவிட்டுச் சென்றரே, என்று நிதியாவது கொடுத்தாரா? இல்லை. இப்படி எதையும் செய்யாமல் நம்முடைய திராவிட மாடல் அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுத்த 6000 ரூபாயும், ஏராளமான நலத்திட்ட உதவிகளையும் பிச்சை என்று சொல்ல வைக்கிறார்.
இந்த லட்சணத்தில், சென்னைக்கு ஏதோ ‘ஷோ’ என்று வந்தார். என்ன ஷோ அது? ரோடுஷோ இப்படி ஷோ காட்டிவிட்டுப் போக வெட்கப்பட வேண்டாமா? அண்டப்புளுகு ஆகாசப் புளுகு என்ற சொல்லுவார்களே, அப்படி, நேற்று ஒன்று சொன்னார்கள். கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்துக்குப் பத்து லட்சம் கோடி ரூபாய் கொடுத்திருப்பதாக பச்சைப் பொய் சொல்கிறார்கள். நம்மிடம் ஒரு ரூபாயை வரியாக வாங்கினால், 29 பைசா மட்டும் திருப்பித் தந்துவிட்டு, நேற்று ஒரு கணக்கு காட்டியிருக்கிறார்கள், எல்லாம் பொய்க் கணக்கு.

உதாரணத்துக்குச் சொல்கிறேன். நான் பலமுறை கோரிக்கை வைத்தும் ஒரு ரூபாய் கூட கொடுக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் கொடுத்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். சென்னை முழுவதும் மெட்ரோ பணிக்காகச் சாலைகள் தோண்டப்பட்டு, பணிகள் மெதுவாக நடக்கிறதே அதற்கு என்ன காரணம்? மத்திய பாஜக அரசு ஒருபைசா கூட பணம் தராததுதான். அப்படியும் பணிகளை முடித்தாக வேண்டுமே, திட்டத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டுமே என்று மாநில அரசே நிதிச்சுமையை ஏற்றுக்கொண்டு பணிகளைச் செய்து கொண்டு இருக்கிறோம். இதனால், நம் அரசுக்கு ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாகச் செலவாகிறது.

இப்படி நிதிநெருக்கடியை உருவாக்கிவிட்டு, சர்வசாதாரணமாகப் பொய் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இங்கே மீனவர்கள் பலர் வந்திருக்கிறீர்கள், சாகர்மாலா திட்டத்துக்கு 2 லட்சம் கோடி ரூபாய் கொடுத்திருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பணிகள் எங்கேயாவது நடந்து பார்த்திருக்கிறீர்களா?அதுமட்டுமல்ல, ஒற்றைச் செங்கல்லோடு நிற்கும் எய்ம்ஸ்க்கு 1,960 கோடியாம். அதற்குத்தான் கேட்டேன். நீங்கள் பேசும் எத்தனை பொய்களைத்தான் எங்கள் காதுகள் தாங்கும்? எங்கள் காது பாவமில்லையா. தன்னுடைய பத்தாண்டுகால ஆட்சிக்கு ரிப்போர்ட்கார்டு கொடுக்கமுடியாத பிரதமர் மோடி எந்த முகத்தோடு வாக்கு கேட்டு வருகிறார்.

அவரிடம், சொல்லச் சாதனைகள் இல்லை. மத்தியில் திமுக காங்கிரஸ் கூட்டணி அரசில், தமிழகத்துக்கு என்னென்ன சாதனைகளைச் செய்திருக்கிறோம் என்று நானும் பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறேன். குறிப்பாக, இங்கு சென்னைக்கு மட்டும் சொல்ல வேண்டும் என்றால், சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டம். மதுரவாயல் – துறைமுகம் இடையே பறக்கும் சாலைத் திட்டம். சென்னை துறைமுகத்தையும் – எண்ணூர் துறைமுகத்தையும் இணைக்கும் சாலையை அகலப்படுத்தும் திட்டம். கத்திப்பாரா, பாடி என்று பல்வேறு மேம்பாலங்கள். நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம். இப்படி நிறைய இருக்கிறது. மீண்டும் தமிழகத்துக்கு இதுபோன்ற திட்டங்களைத் தரும் பிரதமர்தான் நமக்கு வேண்டும். அதற்கு நீங்கள் இண்டியா கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும்.

இப்படி நாம் ஒரு பக்கம் சாமானிய, ஏழை, நடுத்தரக் குடும்பங்களுக்காகப் பார்த்துப் பார்த்து பலதிட்டங்களை ஆட்சிக்கு வந்த அடுத்த நொடியிலிருந்து நிறைவேற்றிக் கொண்டு இருந்தால், இன்னொரு பக்கம் அவர்களை நடுத்தெருவில் நிற்கவைக்கும் திட்டங்களையும், சட்டங்களையும் மத்திய பாஜக அரசு அடுத்தடுத்து கொண்டு வருகிறார்கள். நடுத்தர வர்க்க மக்கள் என்ன செய்கிறார்கள்? ஹோட்டலிலிருந்து டூவீலர் வாகனத்தைப் பழுது பார்க்கிறவரை, எல்லாவற்றிற்கும் GST. ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்ட பில்லை வாங்கிப்பார்த்தால், கூடுதலாக, ஒருதொகை இருக்கும். GST தொகை என்று அதைப் பார்த்துவிட்டு மக்கள் என்ன கேட்கிறார்கள்? கார்ப்பரேட்டுகளுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறார்கள். ஆனால், சாமானிய மக்கள் மேல் இவர்களுக்கு கொஞ்சம்கூட கருணையே கிடையாதா? என்று மக்கள் புலம்புகிறார்கள்.

இப்படி மக்கள் சொல்கிறார்கள் என்று மீடியாவில் கேட்டால், “ஹோட்டலில் ஏன் சாப்பிடுகிறீர்கள். வீட்டில் சாப்பிட ஜிஎஸ்டி வரி எதுவும் இல்லையே!” என்று திமிராக பதில் சொல்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். போகும் போக்கை பார்த்தால், மக்கள் நிறைய செல்பி எடுக்கிறார்கள் என்று, இனி, செல்பி எடுக்கவும் இவர்கள் ஜிஎஸ்டி போட்டாலும் போடுவார்கள். மாநில முதல்வராக இருந்தபோது ஜிஎஸ்டியைக் கடுமையாக எதிர்த்தவர்தான் மோடி. “இதை அமல்படுத்துவது சாத்தியமே இல்லை. என் பிணத்தின் மீதுதான் ஜிஎஸ்டியை அமல்படுத்த முடியும்”என்று கர்ஜித்தார்.

ஆனால், பிரதமர் ஆனதும் என்ன சொல்கிறார்? ஜிஎஸ்டி வரி என்பது பொருளாதாரச் சுதந்திரம் என்று சொல்கிறார். ஜிஎஸ்டியில் கிடைக்கின்ற மொத்த வருவாயில், 64 சதவீதம் அடித்தட்டு மக்களிடம் இருந்தும்; 33 சதவீதம் நடுத்தர மக்களிடம் இருந்தும் வசூல் செய்யப்படுகிறது. வெறும் 3 சதவீதம்தான், பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. பிரதமர் மோடி சொன்னது போன்று GST யாருக்குப் பொருளாதார சுதந்திரமாக இருக்கிறது என்றால், அவருடைய நண்பர்களான கார்ப்பரேட்களுக்கு மட்டும்தான்.

இப்படி நாம் இந்த மக்கள்விரோத நடவடிக்கைகளை எதிர்த்துகொண்டு இருந்தால், பழனிசாமி முதல்வராக இருந்து தமிழகத்தினுடைய எல்லா உரிமைகளையும் மொத்தமாக பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார்.அதனால்தான், அதிமுக அடிமை ஆட்சி என்று அவருடைய ஆட்சியை விமர்சித்தோம். எடுத்துக்காட்டாக, சில நிகழ்வுகளை மட்டும் சொல்ல வேண்டும் என்றால், சிறுபான்மையினருக்கு எதிரான CAA சட்டத்தை ஆதரித்து ஓட்டுபோட்டது அதிமுக நாடாளுமன்றத்தில் ஓட்டு போட்டது மட்டுமில்லாமல், இந்தச் சட்டத்தால் எந்த முஸ்லீம் பாதிக்கப்பட்டார்கள்? என்று சட்டமன்றத்திலேயே ஆணவமாகக் கேட்டவர்தான் பழனிசாமி.

அதுமட்டுமில்லாமல், இதே வடசென்னையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திய நான் உள்பட, ப.சிதம்பரம், பாலகிருஷ்ணன், திருமாவளவன், ஜவாஹிருல்லா, உதயநிதி என்று 8000 பேர் மேல் FIR போட்டதுதான் பழனிசாமி ஆட்சி. பெண்கள், குழந்தைகள் என்றுகூட பார்க்காமல் எல்லோர் மேலும் தடியடி நடத்தி ரசித்தார் பழனிசாமி. இரண்டாவது எடுத்துக்காட்டு, மூன்று வேளாண் சட்டங்கள்! இதையும் ஆதரித்து உழவர்களுக்கு துரோகம் செய்த புண்ணியவான்தான் பழனிசாமி. பாஜகவுக்கு விசுவாசத்தை காட்டும் வேகத்தில், இன்னும் ஒருபடி மேலே போயி, “இந்த சட்டம் வந்தால் நம் விவசாயிகள் உத்தரபிரதேசம் சென்று வியாபாரம் செய்யலாம். இதை எதிர்ப்பவர்கள் விவசாயிகள் இல்லை, புரோக்கர்கள்” என்று விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினார்.

இத்துடன் நிறுத்தினாரா? இல்லை. திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர் என்று தமிழகம் பெரிதும் மதித்துப் போற்றும் ஆளுமைகள் மேல் பாஜக காவிச்சாயம் பூசியதைக் கைகட்டி, வாய்பொத்தி வேடிக்கை பார்த்தார். இவ்வளவு ஏன்? தன்னுடைய சொந்தக்கட்சித் தலைவரான எம்ஜிஆருக்கு பாஜக காவிச்சாயம் பூசியதையே கண்டுகொள்ளாமல் இருந்தவர்தான் பழனிசாமி. அவர்தான், இந்தத் தேர்தலில் பாஜக.வின் உத்தரவுப்படி, பி-டீமாக நிற்கிறார்.இதுகூட, அவருடைய சொந்த முடிவு இல்லை. பாஜக எழுதிக்கொடுத்த ஸ்க்ரிப்ட்டில் இவர் நாடாளுமன்றத் தேர்தலுக்காக நடிக்கிறார். பழனிசாமியின் வேடமெல்லாம் மக்களிடம் எப்போதும் எடுபடப் போவது இல்லை!

இந்தத் தேர்தலில் இண்டியா கூட்டணியை வெற்றி பெற வைக்க இந்தியா முழுவதும் எல்லா மாநில மக்களும் தயாராகிவிட்டார்கள். தமிழகம் முழுவதும் நான் தேர்தல் சுற்றுப்பயணம் போய்விட்டு சென்னை வந்திருக்கிறேன்.ஒவ்வொரு ஊரிலும் பொதுமக்கள், இளைஞர்கள், குறிப்பாக, பெண்கள் தருகிற ஆதரவு பிரமிக்க வைக்கிறது. சென்னையும் திருவள்ளூரையும் 10 ஆண்டு ஆட்சியில் பாஜகவும் – அதிமுகவும் முழுமையாகப் புறக்கணித்தார்கள். அதனால்தான் 2019 தேர்தலிலும், 2021 தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் நீங்கள் அவர்கள் இண்டு பேரையும் மொத்தமாக ஒதுக்கி, திமுக கூட்டணிக்கு முழுவெற்றியை தந்தீர்கள். அது இந்தத் தேர்தலிலும் தொடர வேண்டும்”, என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.