நேபாள பாராளுமன்றம் மற்றும் 7 மாகாணங்களின் பேரவைகளுக்கு கடந்த நவம்பர் 26 மற்றும் டிசம்பர் 7-ந்தேதிகளில் தேர்தல் நடந்தது. 275 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 165 பேர் தேர்தல் மூலமும், 110 பேர் விகிதாசார அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
தேர்தலில் ஆளும் நேபாளி காங்கிரஸ், மாதேசி கட்சிகள் இணைந்து ஓரணியாகவும், நேபாள கம்யூனிஸ்ட் மாவோயிஸ்டு மையம், அடங்கிய இடதுசாரி கூட்டணி எதிரணியாகவும் போட்டியிட்டன.
கடந்த 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. துவக்கத்தில் இருந்தே எதிர்கட்சியான இடதுசாரி கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. நேற்றைய நிலவரப்படி இடதுசாரி கூட்டணி ஆட்சியைப் பிடிப்பது உறுதி செய்யப்பட்டது.
6 நாட்களாக நடந்த வாக்கு எண்ணிக்கை இன்று நிறைவடைந்தது. இதில், இடதுசாரி கூட்டணி மொத்தம் 116 இடங்களைப் பிடித்து மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்தது. இதில், முன்னாள் பிரதமர் கே.பி.ஒலி தலைலையிலான நேபாள கம்யூனிஸ்டு கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்டு வெனினிஸ்டு ) 80 இடங்களிலும், மற்றொரு முன்னாள் பிரதமர் பிரசந்தா தலைமையிலான (மாவோயிஸ்டு சென்டர்) 36 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதன்மூலம் கே.பி. ஒலி விரைவில் பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளும் நேபாளி காங்கிரஸ் கட்சி 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது. மாதேசி கட்சிகள் 21 இடங்களை பிடித்துள்ளன.
இதேபோல் மாகாணம் 2-ஐ தவிர மற்ற மாகாணங்களில் இடதுசாரி கூட்டணி மெஜாரிட்டி பெற்றுள்ளது.