ரதயாத்திரைக்கு எதிராக மறிலில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட 75 எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு


ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று தலைமை அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 75 திமுக எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விஸ்வ இந்து பரிஷாத் அமைப்பின் சார்பாக, கடந்த மாதம் 13 ஆம் தேதி ராம ராஜ்ய ரத யாத்திரை உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் தொடங்கியது. இதனை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராம ராஜ்ய ரத யாத்திரை, நேற்று நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக தமிழகத்திற்கு வந்தது. இதற்கு ஸ்டாலின், வைகோ, சீமான், வேல்முருகன், திருமுருகன் காந்தி உள்ளிட்ட பல்வேறு தமிழக கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து, நேற்று காலை நெல்லைக்கு வந்த ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியினரும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விடுதலைக் கட்சிகள் தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே, நேற்று நடைபெற்ற தமிழக சட்டபேரவை கூட்டத்தில், கேள்வி நேரத்திற்குப் பின் கூடுதல் நேரத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ராம ராஜ்ய ரத யாத்திரை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “ரத யாத்திரைக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். தமிழகத்தில் அனைத்து மதத்தினருக்கும் மதிப்பளிக்க வேண்டும். ரத யாத்திரை அமைதியாக நடைபெற தேவையான பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே 5 மாநிலங்களில் ரத யாத்திரை செய்த பின்தான் தமிழகத்திற்கு வந்துள்ளது. இந்தப் பிரச்சனையை எதிர்க்கட்சிகளின் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியாகவே பார்க்கிறேன்” என்று விளக்கமளித்தார்.
இதனையடுத்து, முதல்வரின் விளக்கத்தை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவர்களை அவைத்தலைவர் வெளியேற்றினார்.

வெளியே வந்த திமுக கட்சியினர் மறியலில் ஈடுபட்டதால், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்களை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், நேற்று மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 75 திமுக எம்எல்ஏக்கள் மீது கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரியார் சிலை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை: பேரவையில் முதல்வர் எடப்பாடி பதில்..

ஜெ., மருத்துவமனைக்கு செல்லும் முன் போயஸ் கார்டனில் நடந்தது என்ன?: சசிகலா வாக்குமூலம்..

Recent Posts