கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்., வெற்றிவாய்ப்பு: கருத்துக் கணிப்பில் தகவல்..


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் வரும் மே 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மே 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தற்போது அங்கு முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. பேரவைத் தேர்தல் தொடர்பாக ‘சி-போர்’ என்ற நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஆளும் காங்கிரஸ் 126 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும். பாஜகவுக்கு 70 இடங்களும், தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 27 இடங்களும் கிடைக்கும் என்று ‘சி போர்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹைதராபாத் – கர்நாடகா, பெங்களூரு, பழைய மைசூரு பகுதிகளில் காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. கடற்கரை பகுதிகள், மும்பை-கர்நாடகா பகுதிகளில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று கூறப்பட்டுள்ளது.

டிவி9-சிவோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் 102, பாஜக 96, மதச்சார்பற்ற ஜனதா தளம் 25 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தரப்பில் முதல்வர் சித்தராமையா தலைமையேற்று பிரச்சாரம் செய்து வருகிறார். அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் கர்நாடகாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பாஜக தரப்பில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா பிரச்சாரத்துக்கு தலைமை ஏற்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தலைவர் அமித் ஷா ஆகியோர் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பல்வேறு கூட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.

கோவை இந்தியன் வங்கியில் ரூ.32 லட்சம் மோசடி : துணை மேலாளர் கைது..

லாட்டரி மார்டின் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..

Recent Posts