தமிழகத்தில் மின்சார பேருந்து திட்டத்தை செயல்படுத்த, இங்கிலாந்து நிறுவனத்துடன் தமிழக போக்குவரத்துத் துறை ஒப்பந்தம் செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இங்கிலாந்தின் சி-40 என்ற முகமை, மின்சாரப் பேருந்துகளை பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்தி வருகிறது. பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையிலும், சுற்றுப்புறச் சூழல்களை பாதுகாக்கும் வகையிலும் தமிழக அரசு காற்று மாசுபாட்டை வெகுவாக குறைக்கும் மின்சார பேருந்து திட்டத்தை சி-40 முகமையின் வழிகாட்டுதல் படி செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
இதன் அடிப்படையில், நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமி முன்னிலையில், தமிழக போக்குவரத்துத் துறை மற்றும் சி-40 முகமை இடையில் அறிக்கை கையெழுத்தானது. இதன் மூலம், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்து, புதிய தொழில்நுட்பத்தை புகுத்துவது, மின்சார பேருந்துகளை குறைந்த விலையில கொள்முதல் செய்தல் ஆகிய நன்மைகள் தமிழகத்துக்கு கிடைக்கும்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், போக்குவரத்துத் துறை செயலர் பி.டபிள்யூ.சி.டேவிதார், மாநகர போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் தாணுலிங்கம், சி-40 சிட்டீஸ் கிளைமேட் லீடர்ஷிப் குரூப் துணை செயல் இயக்குநர் கேவின் ஆஸ்டின், கிளீன் எனர்ஜி இயக்குநர் ஜேம்ஸ் அலெக்சாண்டர், மண்டல இயக்குநர் சஞ்சய் ஸ்ரீதர், சி-40 நகர இயக்குநர் ஆர்.எட்சிலி நியோசன் டேனியல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.