‘பிரதமர் மோடி ஆட்சியில் பொருளாதாரம் தவறான பாதையில் செல்கிறது’: அமர்த்தியா சென் வேதனை…


2014-ம் ஆண்டில், பிரதமராக மோடி பதவி ஏற்றபின், நாட்டின் பொருளாதாரம் தவறான பாதையில் செல்கிறது, சமூகக்காரணிகள் மீதான அக்கறை குறைந்துவிட்டது என்று நோபல் பரிசு வென்ற இந்தியப் பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் வேதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவும் அதன் முரண்பாடுகளும் என்ற தலைப்பில் புதிய நூல் எழுதியுள்ளார். அந்த நூலின் வெளியீட்டுவிழா, கலந்துரையாடல் விழா டெல்லியில் நடந்தது. அதில் அமர்த்தியா சென் பேசியதாவது:

கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அக்கறை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி மீதும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், சமூகக் காரணிகள் மீது போதுமான அக்கறை இல்லாமல், முக்கியமான விஷயங்களில் இருந்து விலகி, நாட்டின் பொருளாதாரம் தவறான பாதையில் செல்கிறது. பெரும்பாலான விஷயங்கள் மிகவும் மோசமாகச் செல்கின்றன.

உலகில் மிகவும் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு என்ற பெயர் பெற்றிருந்தும், அதற்கு முரணாக இந்தியா நடக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், ஆசியப் பிராந்தியத்தில், 6 வளரும் நாடுகளில் இலங்கைக்கு அடுத்தார்போல் இந்தியா 2-வது இடத்தில் இருந்தது.

ஆனால், இப்போது 2-வது மோசமான இடத்துக்குச் சென்றுவிட்டது. ஆனால் மோசம் என்றவார்த்தையில் இருந்து பாகிஸ்தான் எப்படியோ தன்னை தற்காத்துக்கொண்டுவிட்டது.

இந்தத் தேசத்தில் இன்னும் ஒரு பெரிய கூட்டத்தைச் சேர்ந்த மக்கள், மனித கழிவுகளை அள்ளிக்கொண்டும், குப்பைகளையும், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டும் இருக்கிறார்கள். இந்த மக்களின் தேவைகள், கோரிக்கைகள் தொடர்ந்து புறந்தள்ளப்படுகின்றன.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஒரு பெட்ரோல் நிலையத்தில் பணிபுரியும் ஒரு தலித் தொழிலாளி தனது முதலாளியிடம் சம்பளத்தை உயர்த்திக் கேட்டதற்காக அவருக்கு அந்த முதலாளி சவுக்கடி கொடுத்தார். இன்னும் இந்த நாட்டில் தலித் மக்கள் அடுத்த வேளை சோற்றுக்கும், உணவுக்கும், கல்விக்கும், சுகாதாரத்துக்கும் நிலையில்லாமல் வாழ்ந்து வருகிறார்கள்.

சுதந்திரப் போராட்டகாலத்தில், இந்துத்துவா கொள்கையை, கோஷத்தை முன்னெடுத்து நாம் அரசியல் போராட்டம் நடத்திய இருந்தால், நமக்குச் சுதந்திரம் கிடைத்திருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், இப்போது இந்துத்துவா கோஷம் எளிதாகி, சூழல் மாறிவிட்டது.

ஆனால், இன்று இந்துத்துவா கோஷம் ஓங்கி ஓலித்துவிட்டது. எதனால், எப்படி என்று சிந்திக்க வேண்டும். இந்த நேரத்தில் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை மிகவும் அவசியம்.

இது பிரதமர் மோடிக்கும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் இடையிலான போட்டி என நினைத்துவிடக்கூடாது. இந்தியா என்றால் என்ன, தோற்றம் என்ன என்பதை மீட்டெடுக்கும் போராட்டமாகும்.

இவ்வாறு அமர்த்தியா சென் பேசினார்.

நிர்பயா குற்றவாளிகளின் மரண தண்டனை மேல் முறையீட்டு மனு : உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு..

“தமிழகத்தில் அதிகமான ஊழல்”: பாஜக தலைவர் அமித் ஷா வேதனை…

Recent Posts