நாவின் சுவை அரும்புகளை தட்டிவிட்டு சப்புக்கொட்ட வைக்கும் தன்மை கொண்டது இது. அதாவது சுவையூக்கி. பளபள சர்க்கரை, உப்புக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல இந்த மோனோசோடியம் குளுடோமேட் (MSG).
இந்த வேதி உப்பை தயாரித்து வர்த்தகப்படுத்தும் ஜப்பான் நிறுவனம்தான் அஜினோமோட்டோ. இதுதரும் சுவை ‘உமாமி’ எனப்படுகிறது. நாக்கையும், மூக்கையும் ஒருசேர அடிமைப்படுத்தும் தன்மை கொண்ட இது, உடலுக்கு நல்லதா, கெட்டதா என்ற சர்ச்சை வளையத்தில்தான் உள்ளது. சரியான அளவில் MSG-ஐ பயன்படுத்தினால் கெடுதல் இல்லை என்கிறது மத்திய அரசின் உணவு கட்டுப்பாட்டு அமைப்பு. பிறகு ஏன் இதை கெடுதல் என்று பலரும் சொல்கிறார்கள்?
சோடியமும், குளுடோமேட்டும் சேர்ந்ததுதான் மோனோசோடியம் குளுடோமேட். உணவுப்பொருட்களில் அடங்கியுள்ள அமினோ அமிலங்களில் இது அத்தியாவசியமில்லாத பட்டியலில்தான் வகைப்படுத்தப்படுகிறது. தேவையான அளவு குளுடோமேட் எனப்படும் குளுடாமிக் அமிலத்தை உற்பத்தி செய்துகொள்ளும் திறன் நமது உடலுக்கு உண்டு. அதேபோல் நாம் உண்ணும் உணவில் இருக்கும் புரதத்தில் இருந்தும் உடலானது 13 கிராம் குளுடோமேட்டை எடுத்துக்கொள்ளும். மூளையில் நியூரோ டிரான்ஸ்மிட்டராக குளுடோமேட் செயல்படுகிறது. மோனோசோடியம் குளுடோமேட்டை பொறுத்தமட்டில், FDA அறிக்கைபடி நாம் உண்ணும் உணவிலிருந்தே நமக்கு அரை கிராம் MSG கிடைக்கிறது. அதாவது தக்காளி, திராட்சை, சீஸ், காளான், சோயா, சில காய்கறிகள், இறைச்சி மற்றும் தாய்ப்பாலில் இயற்கையாகவே மோனோசோடியம் குளுடோமேட் உள்ளது.
இவ்வாறு மோனோசோடியம் குளுடோமேட் இயற்கையாகவே நமக்கு கிடைக்கும் நிலையில், சுவைக்காக அதை உணவில் சேர்க்கும்போதுதான் சிக்கல் ஏற்படுகிறது. அதாவது அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. தினசரி அரை கிராம் அளவுக்கான மோனோசோடியம் குளுடோமேட் எந்தப் பிரச்னையும் செய்யாது. இந்த அளவை தாண்டும்போது, இயல்பாகவே அது தனது வேலையை காட்டத் தொடங்கிவிடும்.
MSG கலந்த உணவை அதிகம் சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ளும்போது, உடல் எடை கூடுவதாக ஆய்வறிக்கை உறுதிசெய்கிறது. உடல் பருமன்தானே தொற்றா நோய் கூட்டங்களுக்கு முதல்படி. நாளடைவில் முகம், கழுத்துப் பகுதி மரத்துப்போகும், படபடப்பு ஏற்படும், ரத்தக் கொதிப்பு அதிகமாகும். பலருக்கும் இது அலர்ஜி எனப்படும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். தலைவலி, தசை இறுக்கம், நமைச்சல், சோர்வு, குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படலாம். MSG-யால் ஏற்படும் இந்த வகை பிரச்னையை ‘சைனீல் ரெஸ்டாரன்ட் சின்ட்ரோம்’ என்கிறது மருத்துவ உலகம்.
கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு அஜினோமோட்டோ எதிரி. பெரியவர்களே சுவையை தியாகம் செய்யத் தயாராக இல்லாத நிலையில், குழந்தைகள் அஜினோமோட்டோ அதாவது MSG கலந்த திண்பண்டங்களை வெளுத்துக்கட்டுவார்கள். விளைவு, உடல் வளர்ச்சி தடைபடும் அதேநேரம், எடை தாறுமாறாக அதிகரிக்கும். இரைப்பை, சிறுகுடல் பாதிக்கப்படும். வயிற்றுவலி ஏற்படும்.
இதையெல்லாம் தாண்டி, மருத்துவ நிபுணர்கள் சிலர் எச்சரிப்பதை பார்த்தால் பயம்தான் வருகிறது. MSG-யை அதிகம் சேர்த்துக்கொள்ளும்போது மூளை உள்பட பல முக்கிய நரம்பு செல்களை அது பாதிக்கும் என்கின்றனர். புரியும்படி சொன்னால் மூளை நரம்பில் பிரச்னை வரும்.
இயற்கையாக கிடைக்கும் குளுடோமேட்டால் மூளை, நரம்புகளுக்கு எந்த பாதிப்பும் வராது. சுவைக்காக நாம் கூடுதலாக உள்ளே தள்ளும்போது பிரச்னைகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும். ரெடிமேட் உணவுகள், உணவகங்களில் பரிமாறப்படும் சூப் மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ் போன்றவற்றில் பெரும்பாலும் MSG சேர்க்கப்பட்டிருக்கும். இதன் உணவுக்குறியீடு E-621. சீன உணவு வகைகளில் MSG-க்கு பிரதான இடம் உண்டு. இயந்திரத்தனமான வாழ்க்கையில் உணவகங்களில் சாப்பிடுவதை பெரும்பாலானோர் வாடிக்கையாகவே வைத்துள்ளனர். அதேநேரம் உணவகங்களும் வாடிக்கையாளர்களை ஈர்க்க அஜினோமோட்டோ சேர்க்கின்றனர்.
இதுஒருபுறம் என்றால் தெரு ஓர ஃபாஸ்ட் ஃபுட் கடைகள். தொற்றா நோய்களின் பிறப்பிடங்களில் ஒன்று என்றே இதை வகைப்படுத்தலாம். ருசி என்ற ஒன்றுக்காக வகை தொகையில்லாமல் உணவை பரிமாறுகின்றன ஃபாஸ்ட் ஃபுட் கடைகள். இங்கெல்லாம் சுவையூக்கியான அஜினோமோட்டோவை வரைமுறையின்றி பயன்படுத்துகின்றனர். உணவகங்களைத் தாண்டி வீட்டு சமையலறைக்கும் வந்துவிட்டது இந்த MSG.
ஐ லைக் சைனீஸ் ஃபுட்ஸ், ஐ பிரிஃபர் சைனீஸ் ரெஸ்டாரன்ட், எனக்கு நூடுல்ஸ்தான் பிடிக்கும், ஃபிரைடு ரைஸ்தான் சாப்பிடுவேன் என்ற பந்தாவெல்லாம் இனி வேண்டாம். ஆரோக்கியம் பேண வேண்டுமென்றால் நாக்கையும், மனதையும் கட்டுப்படுத்தியே தீர வேண்டும். உயிரை இருத்தி வைக்க உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து உணவையே மருந்தாக்கினால் மகிழ்ச்சி நிச்சயம்.
. . . . .
தொடர்பு எண் : 99626 78218
விலாசம் : G-10, மஹாலட்சுமி ஃபிளாட்ஸ், 80, நாட்டு சுப்பராயன் தெரு, மயிலாப்பூர், சென்னை – 4
000
Is ajinomoto really dangerous? : K. Gopinath