சுதந்திர தினம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..


சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள சுதந்திர தின வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

நம் பாரத நாட்டிற்கு வணிகம் செய்வதற்காக வந்து, படிப்படியாக நம்மை அடிமையாக்கி ஆட்டிப் படைத்த ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து, நம் இந்தியத் திருநாடு விடுதலை பெற்ற இந்த இனிமையான நாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த சுதந்திர தினத்திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரைத் துச்சமென மதித்து, உயிர் தியாகம் செய்ததோடு, வன்முறைகளுக்கு இடம் கொடாமல், அஹிம்சை மூலமே அடிமை விலங்கைத் தகர்த்தெறிந்த தியாகச் செம்மல்கள் நிறைந்த மாநிலம் நம் தமிழ்நாடு.

நாட்டின் விடுதலை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, தங்களின் சொந்த நலன்களை பற்றி சிந்திக்காமல், நாட்டு விடுதலைக்காகவே தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து போற்றும் பொன்னாள் சுதந்திர திருநாளான இன்னாள் ஆகும்.

தாய் மண்ணை மீட்கப் போராடிய சுதந்திர போராட்ட தியாகிகளின் சிறப்பினை போற்றிடும் வகையில், அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, விடுதலை போராட்டத் தியாகிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர ஓய்வூதியத்தை 12,000 ரூபாயிலிருந்து 13,000 ரூபாயாகவும், அவர்களது வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியத்தை 6,000 ரூபாயிலிருந்து 6,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கியது; வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, வ.உ.சிதம்பரனார் ஆகியோரது வழித்தோன்றல்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர சிறப்பு ஓய்வூதியத்தை 6,000 ரூபாயிலிருந்து 6,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கியது.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் அளப்பறிய தியாகங்களை வருங்கால சந்ததியினர் அறிந்து போற்றிடும் வகையில், தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம், தியாகி தீரன் சின்னமலை நினைவுச் சின்னம், தியாகி வாஞ்சிநாதன் நினைவு மண்டபம், வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம், வீரத்தாய் குயிலி நினைவுச் சின்னம், வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம்.

தியாகி சுந்தரலிங்கனார் மணி மண்டபம், திண்டுக்கல் மாவட்டத்தில் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் நினைவு மண்டபம், என பல்வேறு சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவகங்களை நிறுவி சிறப்பித்து வருவதுடன், விடுதலைப் போராட்ட தியாகிகளின் நினைவிடங்கள், நினைவு இல்லங்கள், நினைவுச் சின்னங்கள், மணிமண்டபங்கள் ஆகியவற்றை புனரமைத்தும் வருகிறது.

மேலும், விடுதலைப் போராட்ட தியாகிகளை பெருமைப்படுத்தும் வகையில், அன்னார்களது பிறந்த நாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நன்னாளில், பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்கவும், இந்தியத் திருநாட்டை வல்லரசாக்கவும், தமிழ்நாட்டை வளம் மிக்க முன்னோடி மாநிலமாக உருவாக்கிடவும், நாம் அனைவரும் சாதி, மத, பேதங்களை கடந்து, இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வுடன், அயராது உழைத்திட வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்..

மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் வானிலை மையம் எச்சரிக்கை..

Recent Posts