துருக்கி பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் எதிரொலியாக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. ரூபாய் மதிப்பு சரிவால் சாதாரண மக்கள் விலை உயர்வு போன்ற நெருக்கடிகளைச் சந்தித்தாலும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு லாபம் கொழிக்கும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். ஏன் தெரியுமா… ரூபாய் மதிப்பு சரிந்தால் டாலர் மதிப்பு உயர்கிறது என்றுதானே பொருள். அதனால், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள், மருந்து நிறுவனங்கள், சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் அவர்கள்… இதற்கெல்லாம் காரணம் யார் என நினைக்கிறீர்கள்.. எல்லாம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான்…
எப்படி என்கிறீர்களா… அண்மைக்காலமாக எண்ணெய்வள நாடுகளுக்கு பல்வேறு வகையில் நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறார் ட்ரம்ப்.
,துருக்கியில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஸ்டீல், அலுமினியத்திற்கு இறக்குமதி வரியை அதிபர் டிரம்ப் இரு மடங்காக அதிகரித்துள்ளார். இவற்றின் எதிரொலியாக துருக்கி நாட்டில் பணவீக்கம் 17 சதவீதமாக அதிகரித்துள்ளது. முதலீட்டாளர்கள் பணத்தை எடுத்ததால் பங்குசந்தையிலும் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
இது போன்ற காரணங்களால் டாலருக்கு நிகரான லிராவின் மதிப்பு ஒரு வாரத்தில் 20 சதவீதமும், நடப்பு ஆண்டில் 70 சதவீதமும் சரிவடைந்துள்ளது. இதனை சரிகட்டுவதற்கு போதுமான அன்னிய செலாவணி கையிருப்பும் துருக்கி அரசிடம் இல்லை.
லிராவின் மதிப்பு சரிவடைந்ததன் தாக்கம் பல்வேறு நாட்டு நாணய மதிப்பிலும் எதிரொலித்ததைப் போல், இந்தியப் பொருளாதாரத்தையும் உலுக்கி உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கட்கிழமை 69 ரூபாய் 93 காசுகள் என்ற விதத்தில் சரிந்த நிலையில் செவ்வாய்கிழமை 70 ரூபாய் 7 காசுகள் என்று வரலாற்றில் இல்லாத அளவுக்கு ரூபாய் நோட்டின் மதிப்பு அதலபாதாளத்திற்கு சரிந்தது.
பின்னர் ரிசர்வ் வங்கி பொதுத்துறை வங்கிகள் மூலம் அமெரிக்க டாலரை விற்பனை செய்து மேலும் சரிவடையாமல் தடுத்ததால், 69 ரூபாய் 90 காசுகளாக மீண்டது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71 ரூபாயை தாண்டினால் 80 ரூபாய் வரை வீழ்ச்சி அடைவதற்கு வாய்ப்புள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளதால் இந்தியாவின் இறக்குமதி செலவீனம் அதிகரிக்கும். குறிப்பாக கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவு பல மடங்கு உயரும். இதன் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்து போக்குவரத்து செலவு அதிகரிக்கும். காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் உயரும்.
அதே நேரத்தில் டாலர் மதிப்பு உயர்வடைவது ஏற்றுமதி நிறுவனங்களுக்கு யோகம்தான். குறிப்பாக சாப்ட்வேர், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்களின் வருவாய் அதிகரிக்கும். இப்போது தெரிகிறதா அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான் இதற்கெல்லாம் காரணம் என்று!
– புவனன்
Rupee headed towards 72 levels; IT, pharma stocks to benefit, say analysts