புழல் சிறையை சொர்க்கபுரியாக்கிய அதிகாரிகள் புகைப்படங்கள் வெளியானதால் அதிர்ச்சி…

தமிழகத்தில் சிறைத்துறையில் நடக்கும் முறைகேடுகளின் உச்சக்கட்டமாக சென்னை புழல் சிறையில் கைதிகளின் அறையை ஓட்டல் அறைபோல் மாற்றி சொகுசாக வைத்துள்ள புகைப்படங்கள் வெளியானதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக சிறைச்சாலைகளில் செல்போன் புழக்கம், கஞ்சா புழக்கம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் பணம் கொடுத்தால் கிடைக்கும் என்பது ஊரறிந்த விஷயமாகி போனது.

அதிகாரிகளே இவற்றை சிறைக்குள் கடத்திச் சென்று கொடுப்பது வாடிக்கையான விஷயமாக மாறிப்போனது.

இதில் சில அதிகாரிகள் அவ்வப்போது சிக்கி நடவடிக்கைக்கு உள்ளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

பரோலில் வர, மற்ற சலுகைகள் பெற ஐயாயிரம் வரை லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளதாக வந்த புகாரை அடுத்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து சிறைத்துறை கூடுதல் டிஜிபியிடம் விளக்கம் கேட்டுள்ளதும் சமீபத்தில் நடந்தது.

சிறைக்குள் கஞ்சாவை கடத்திச் சென்று கொடுப்பதற்கும், செல்போன்களை கைதிகளிடம் கொண்டு சேர்ப்பதற்கும், சிம் கார்டுகள், சார்ஜர்கள் கொடுப்பதற்கு தனித்தனியாக பணம் வசூலிக்கப்படுவதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகும்.

எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு தொகை என பட்டியல் போட்டு கறாராக வசூலிக்கும் லிஸ்ட்டும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
புழல் சிறையிலும் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது கைதிகளிடம் இருந்து ஆன்ட்ராய்டு செல்போன்கள், கஞ்சா, புதிய உடைகள், விலை உயர்ந்த ஷூக்கள் உள்ளிட்ட பல பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

சமீபத்தில் சென்னை புழல் சிறைக் கைதிகளிடம் கைப்பற்றப்பட்ட செல்போன்களில் எடுக்கப்பட்ட படங்களை சிறையில் உள்ள சில நேர்மையான காவலர்கள் வெளியில் கசிய விட்டுள்ளனர்.

இவைகள் சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதில் உள்ள புகைப்படங்கள் சிறைத்துறைக்குள் உள்ள முறைகேடுகளை படம்போட்டு காட்டுகிறது. சிறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் உள்ள கைதிகள் வெளியில்கூட அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ மாட்டார்கள் அவ்வளவு சொகுசாக வாழ்வது தெரிகிறது.

பொதுவாக சிறையின் அறையில் சாதாரண சிமெண்ட் திண்டு படுக்க இருக்கும், அலுமினிய தட்டு, போர்வை, அறைக்குள்ளேயே கழிவறை என்றுதான் பார்த்திருப்போம்.

ஆனால் தற்போது வெளியான காட்சி அனைத்து எண்ணங்களையும் தவிடு பொடியாக்கி உள்ளது.

காசு கொடுத்தால் சிறையில் எதையும் பெறலாம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. புகைப்படத்தில் கைதிகள் ஜொலிக்கும் உடையில் பளபளவென்று உள்ளனர்.

அறையில் விரும்பிய வண்ணத்தை அடித்து ஓவியம் தீட்டி, திரைச்சீலைகள் போட்டு, கட்டில், மெத்தை, டிவி, செல்போன், வண்ண வண்ண உடைகள், நாற்காலிகள், விலை உயர்ந்த ஷூக்கள், ஆன்ட்ராய்டு போன் வசதிகளுடன் இருப்பது தெரிகிறது.

புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோயை நியமித்தார் குடியரசுத் தலைவர் ..

3000 அரசுப் பள்ளிகளை மூடுவது மாபெரும் அவமானம்: அன்புமணி கண்டனம்..

Recent Posts