மக்களை வாட்டும் மின்வெட்டு : தமிழக அரசு மீது தினகரன் குற்றச்சாட்டு..


எடப்பாடி பழனிசாமியின் அரசு நிர்வாகத் திறமையின்றி தமிழக மக்களை இருளில் மூழ்க வைக்கிறது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கடந்த சில வாரங்களாகவே தமிழ்நாடு முழுவதும் பல மணிநேரங்கள் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு மக்களை வெகுவாக பாதிப்படையச் செய்திருக்கிறது.

இதற்கு பராமரிப்புப் பணிகளே காரணம் என அதிகாரிகளை வைத்து விளக்கம் கொடுத்தாலும், இது திட்டமிடப்பட்ட ஆனால், வெளிப்படையாக அறிவிக்கப்படாத மின்வெட்டு என்பதே உண்மை.

இந்தப் பிரச்சினை தற்போது பூதாகரமாகியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தற்போதைய நிலக்கரி கையிருப்பானது மூன்று நாட்களுக்கு மட்டுமே போதுமானது எனவும், தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியை உடனடியாக வழங்காவிட்டால் சில அனல் மின் நிலையங்களை மூடும் சூழல் ஏற்படும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற அசாதாரணமான சூழ்நிலைக்கு யார் காரணம்?

தமிழகத்தின் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை எப்போதும் 20 நாட்களுக்கு குறையாமல் சேமித்து வைத்திருப்பது வழக்கமாக இருந்துவரும் நிலையில், இன்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மூன்று நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்,

அப்படியானால் இந்த 15 நாட்கள் பழனிசாமியின் அரசு இப்படி ஒரு சூழ்நிலை ஏற்படப்போகிறது என்பதை அறிந்திடவில்லையா? மேலும், ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள சுரங்கங்களில் இருந்துதான் உள்நாட்டு நிலக்கரி தமிழக மின்வாரியத்திற்கு விநியோகம் செய்யப்படுகிறது.

அங்கு கடந்த மாதமே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், மின்வாரியத்தையும் முக்கியமாக டாஸ்மாக்கையும் கவனித்துக்கொள்ளும் தங்கமணிக்கும் நன்றாகவே தெரியும்.

இது போன்ற சூழல்களில் அனல் மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு காற்றாலை மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதே வழக்கம்.

ஆனால், கடந்த மாதம் காற்றாலை மின் உற்பத்தி அதிபர்களுக்கு ஆளும் தரப்பிலிருந்து போடப்பட்ட சில தனிப்பட்ட நிபந்தனைகளை அவர்கள் ஏற்கவில்லை என்பதற்காக காற்றாலை மின்சாரம் அதிக அளவில் உற்பத்தியானபோதும்

அதனை கொள்முதல் செய்யாமல் கையிருப்பில் இருந்த நிலக்கரியைப் பயன்படுத்தி முழு அளவில் அனல் மின் நிலையங்களை இயக்கி இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதுவே இன்று இந்த நிலக்கரி பற்றாக்குறைக்கான மூல காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகம், தற்போதைய ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமையின்மையின் காரணத்தால், தனது தினசரி தேவையைவிட 2500 மெகாவாட் அளவுக்கு மின் பற்றாக்குறை மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது.

உள்நாட்டு நிலக்கரியின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தாவது அனல் மின் நிலையங்களை முழு அளவில் இயக்க முயற்சித்திருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. காரணம் கடந்த காலங்களில் இறக்குமதி செய்ததால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து மத்திய தணிக்கை துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதில் ஏற்பட்ட பயத்தால், நிலக்கரி இறக்குமதியை முழுவதுமாக நிறுத்திவிட்டு உள்நாட்டு உற்பத்தியை மட்டுமே தமிழக அரசு நம்பிவந்தது. தவறு ஏதும் செய்யாத பட்சத்தில் உரிய விளக்கத்தை தணிக்கைத்துறைக்கு கொடுத்துவிட்டு வெளிப்படைத்தன்மையுடன் தொடர்ந்து இறக்குமதியை செய்திருக்கலாமே?

டாஸ்மாக் துறையின்மேல் அமைச்சருக்கு இருக்கும் அக்கறையை, தமிழக மக்களின் அத்தியாவசத்தில் ஒன்றான மின்துறையின் மீதும் சிறிது கொண்டிருந்தால் இதுபோன்ற ஒரு அசாதாரணமான சூழலும், மத்திய அரசிடம் தமிழகம் கையேந்தும் நிலையும் ஏற்பட்டிருக்காமல் தவிர்த்திருக்கலாம்.

எடப்பாடி பழனிசாமியின் அரசு ஆளும் மத்திய அரசிற்கு அடிமையாக இருக்கிறது என்ற விமர்சனம் வரும்போதெல்லாம், நாங்கள் மாநிலத்தின் நலனுக்காக மத்திய அரசோடு இணக்கமாக இருக்கிறோம் என்று சொல்லி வந்தார்கள். தற்போது தமிழகம் இருளில் மூழ்கும் நிலைக்குச் செல்வதைப் பார்த்தால் எடப்பாடி பழனிசாமிய்ம் அவரது அமைச்சர்களும் இணக்கமாக அல்லாமல், சொந்தத் தேவைகளுக்காக அடிமைகளாக இருந்து வந்துள்ளனர் என்பது நிரூபணமாகியுள்ளது.

இந்த ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் நாள் தான் தமிழக மக்களுக்கு விடிவுகாலமாக அமையும் நாளாகும் என்பதை தெரிவித்துக்கொள்வதோடு, நிர்வாகத்திறமையின்றி தமிழக மக்களை இருளில் மூழ்க வைத்த பழனிசாமியின் அரசிற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தினகரன் கூறியுள்ளார்.

ரூ.310 கோடி டெண்டர் விவகாரம் : முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் கண்டனம்..

மிரட்டும் மின்வெட்டு அபாயம்: மூன்று நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி உள்ளதாத பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

Recent Posts