வங்கிக் கடன் மோசடி மன்னன் விஜய் மல்லையா வெளிநாடு தப்ப சிபிஐயே உதவியது என்ற ராகுல்காந்தியின் குற்றச்சாட்டை சிபிஐ மறுத்துள்ளது.
மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை கைது செய்ய வேண்டும் என்பதற்கு பதிலாக தகவல் தெரிவிக்க வேண்டும் என மாற்றியதாலேயே மல்லையா எளிதில் தப்பிச் செல்ல முடிந்தது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ட்விட்டரில் குற்றம்சாட்டி இருந்தார். மேலும், இதற்கு அப்போதைய சிபிஐ இணை இயக்குநர் ஏ.கே.சர்மா முக்கியக் காரணமாக இருந்ததாகவும் ராகுல் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி, நாட்டின் மிக முக்கியமான பிரச்சினை என்பதால், பிரதமரைக் கேட்காமல் லுக் அவுட் நோட்டீசில் மாற்றம் செய்திருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, மல்லையா வெளிநாடு தப்பிச் செல்ல சிபிஐயே உதவியாக இருந்திருப்பதாகவும் ராகுல் தன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்ல… சிபிஐ இணை இயக்குநராக இருந்த ஏ.கே.சர்மா, பிரதமர் மோடிக்கு மிகவும் வேண்டியவர் என்றும், நீரவ் மோடி, மெகுல் சோக்சி போன்றோர் தப்பிச் செல்லவும் இவரே பொறுப்பாக இருந்துள்ளார் எனவும் ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.
ராகுலின் இந்தக் குற்றச்சாட்டுகளை சிபிஐ செய்தித் தொடர்பாளர் அபிஷேக் தயாள் அடியோடு மறுத்துள்ளார். ஏ.கே.சர்மா மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை எனவும், லுக் அவுட் நோட்டீஸில் உரிய முறைப்படியே மாற்றம் செய்யப்பட்டது எனவும், தனி நபர்கள் விருப்பத்திற்கு அதில் எதுவும் னடைபெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். புகார் வந்தவுடன் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ அதனை சட்டப்படி சிபிஐ எடுத்திருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.நீரவ்மோடி,மெகுல் சோக்சி விவகாரத்திலும், அவர்கள் வெளிநாடு சென்ற பின்னரே புகார்கள் அளிக்கப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
ஆனால் ,ராகுலின் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு சிபிஐயின் இந்தப் பதில் போதுமானதாக இல்லை என்கிறார்கள் அரசியல் விமர்சகரர்கள்.
Rahul alligate CBI, But CBI Dismissed the Charges