நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்களில் குற்றப்பின்னணி கொண்டவர்களை தகுதி நீக்கம் செய்யும் வழக்கில் உச்சநீதிமன்ற அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க இயலாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பாளித்துள்ளது.
குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்ட எம்.பி, எம்எல்ஏ.க்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது எனத் தங்களால் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அமர்வு இவ்வாறு தெரிவித்துள்ளது. மேலும் குற்றப் பின்னணி கொண்டவர்களை அரசியலில் இருந்து அகற்ற நாடாளுமன்றமே தக்க சட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
வழக்கின் பின்னணி
குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் எம்எல்ஏக்கள், எம்.பி.க்களைத் தகுதி நீக்கம் செய்ய வகை செய்யும் சட்டம் தற்போது அமலில் உள்ளது. இந்த நிலையில் ஒரு எம்எல்ஏ மீது குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் பதிவு செய்தாலே அவரது பதவி பறிக்கப்பட வேண்டும் என்று பப்ளிக் இன்டரஸ்ட் பவுண்டேஷன் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் கிரிமினல் வழக்குகளில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட நபர் அரசியலில் ஈடுபடத் தடை விதிக்கவேண்டும், அந்த வழக்கில் தீர்ப்பு வரும் காத்திருக்கக் கூடாது என்று அந்த மனுக்களில் கூறப்பட்டன.
இந்நிலையில் இதன் மீதான தீர்ப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்ட எம்.பி, எம்எல்ஏ.க்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது எனத் தடை விதிக்க முடியாது. அரசியலில் குற்றப் பின்னணி கொண்டவர்களை அகற்ற நாடாளுமன்றமே தக்க சட்டங்களை உருவாக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு வேட்பாளர்கள் தங்களின் குற்றப்பின்னணியை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும். மேலும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை அவர்கள் சார்ந்த கட்சியே வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அதைத் தெரிந்துகொண்டு தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்று பொதுமக்களால் முடிவெடுக்க இயலும்.
குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை எவ்விதம் நடத்துவது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட எம்எல்ஏக்கள், எம்.பி.க்களைத் தகுதி நீக்கக் கோரிய வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர், ரோஹிண்டன் நாரிமன், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகிய ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பையே வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது..