ஊழல் வழக்கில் சிக்கிய மலேசிய முன்னாள் துணைப்பிரதமர் அகமது ஜாகித் ஹமீதி மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின்கீழ் 45 ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.
மலேசியாவில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அரசில் துணைப் பிரதமர் பதவி வகித்தவர், அகமது ஜாகித் ஹமீதி. இவர் ஊழல் வழக்கில் சிக்கி உள்ளார்.
இவர் மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழும் புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்கு பின்னர் நேற்று அவர் கோலாலம்பூர் செசன்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீதான வழக்கு விசாரணை நடந்தது.
விசாரணையின்போது முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், அகமது ஜாகித் ஹமீதி குடும்பத்தினர் கோர்ட்டுக்கு வந்து இருந்தனர்.
விசாரணையின்போது அகமது ஜாகித் ஹமீதி மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின்கீழ் 45 ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
அதைத் தொடர்ந்து அவரை 2 மில்லியன் ரிங்கிட் (சுமார் ரூ.3½ கோடி) ரொக்க ஜாமீனில் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த ஊழல் வழக்கில் அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் மாதம் 14-ந் தேதி நடைபெறும் என நீதிபதி அறிவித்தார்