வட தமிழகத்தில் மீண்டும் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை அறிவிக்கப்படலாம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தன்னார்வ வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் தனது தமிழ்நாடு வெதர்மேன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் கூறியிருப்பதாவது,
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு, வடமேற்காக நகர்ந்து, கடலூர் பகுதியை நோக்கி 21-ம் தேதி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் காற்று பலமாக வீசாது, இது நாளை நிலப்பகுதி அருகே வரும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்பதை உறுதியாகக் கூற இயலாது. ஆனால் அதற்கான சூழல்கள் சாதகமாக இருக்கின்றன.
அது ஒருவேளை வலுவிழந்த புயலாக இருந்தால்கூட, வியப்படையக்கூடாது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு நோக்கி மேகக்கூட்டங்களை இழுத்துச் செல்லும். இதன் காரணமாக வடதமிழகத்தில் நல்ல மழை பெய்யும்.