இறுதி வாக்காளர் பட்டியல் எற்கெனவே திட்டமிட்டபடி வரும் ஜனவரி மாதம் 4 ஆம் தேதி வெளியாகாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களின் தகவல்கள் ஒருங்கிணைப்படும் ஈரோ நெட் மூலம், வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள் இயல்பாக கண்டறிய வழிவகை செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறினார்.
தற்போது தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில், சுமார் 10 லட்ச வாக்காளர்கள் இரண்டு, அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதனால் இரண்டில் எதை நீக்குவது என்பது தேர்தல் ஆணையத்துக்கு சவாலாக உள்ளதாகவும், இதே நிலை தான் நாடு முழுவதும் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தமிழகத்தை பொறுத்த வரை ஜனவரி 10 ஆம் தேதி வரை கால அவகாசம் கோரி கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.