சரவணபவன், அஞ்சப்பர் உள்ளிட்ட உணவகங்களில் அதிரடி சோதனை: வருவாயைக் குறைத்துக் காட்டி ஏமாற்றியதாக புகாராம்

சரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட 4 பிரபல உணவக கிளைகளில், வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை மாலைவரை இந்தச் சோதனை தொடரும் எனத் தெரிகிறது.

சரவணபவன், அஞ்சப்பர், கிராண்ட் சுவிட்ஸ் மற்றும் ஹாட் பிரட்ஸ் ஆகிய உணவகங்கள், கடந்த நான்கு ஆண்டுகளாக விற்பனையை குறைத்துக் காட்டி வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்துள்ளதாக புகார் எழுந்தது.

இந்தப் புகாரை அடுத்து, 4 உணவகங்கள் தொடர்பான இடங்களில், வியாழக்கிழமை காலை வருமான வரிச் சோதனை தொடங்கியது. சென்னை வடபழனியில் உள்ள சரவணபவன் கார்ப்பரேட் அலுவலகம், கேகே நகரில் உள்ள சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் வீடு, அவரது மனைவி மற்றும் மகன், முதன்மை செயல் அதிகாரி கணபதி ஆகியோரின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

சரவண பவன் உணவகத்திற்கு சென்னையில் 25 கிளைகள் உள்பட இந்தியாவில் 56 கிளைகள் உள்ளன. அமெரிக்கா, சவுதி உள்ளிட்ட வெளி நாடுகளிலும் 36 கிளைகள் உள்ளன.

சரவணபவன் உணவகத்தில் வெளிநாட்டு பரிவர்த்தனை தொடர்பாக ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்ததில் வெளிநாட்டு உணவகக் கிளைகளில் இருந்து வரும் வருவாயை மறைத்து முறைகேடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதே போன்று அடையாறு காந்தி நகரில் உள்ள கிராண்ட் ஸ்வீட்ஸ் தலைமையகத்திலும், உரிமையாளர் நடராஜன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் 22 கிளைகளும், புதுச்சேரியில் 4 கிளைகளையும் அமைத்து இயங்கி வரும் ஹாட் பிரட்ஸ் பேக்கரியின் அடையாறு காந்தி நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்துகின்றனர்.

ஹாட் பிரட்ஸ் உரிமையாளர் மகாதேவனின் சென்னையில் உள்ள வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

அதேபோல் தியாகராய நகரில் உள்ள அஞ்சப்பர் உணவகத்தின் தலைமையகத்திலும் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையில் சிக்கியுள்ள ஆவணங்களை வருமானவரித் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.  வெள்ளிக்கிழமை மாலை வரை இந்தச் சோதனை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தனை ஆண்டுகள் இந்த உணவகங்களின் கணக்குகளெல்லாம் ஒழுங்காகக் தான் காட்டப்பட்டனவா… இப்போது என்ன திடீர் சோதனை… இந்தச் சோதனையின் பின்னணி என்ன என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.

 

பாலை நிலத்தை சோலை வனமாக்கி சீனா சாதனை..

ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்படுவது குறைப்பா? ..

Recent Posts