திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வரும் 28ம் தேதி திருவாரூரில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து, திமுக, அமமுக கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளைத் தொடங்கின.
இந்நிலையில், கஜா புயல் பாதிப்பின் காரணமாக திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் ஒத்திவைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்ததுடன், உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார்.
இதையடுத்து, அங்கு தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை எப்படி உள்ளது? என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவுக்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து இதுகுறித்து அறிக்கை அளிக்க திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு சத்யபிரதா சாகு உத்தரவிட்டார்.
இதையடுத்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை இப்போது நடத்தவேண்டாம் என வலியுறுத்தின. கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடிந்தபிறகு தேர்தலை நடத்தலாம் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டது.
கருத்துக் கேட்பு கூட்டத்தின் அடிப்படையில், தலைமைத் தேர்தல் அதிகாரி தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பினார். இந்நிலையில், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பணிகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, இடைத்தேர்லையொட்டி அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்ப பெறப்படுகின்றன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்படுவதால், திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசுடன் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுதொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.