கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநரிடம் ஸ்டாலின் புகார் அளித்தார்.
மேலும் கோடநாடு கொலை, கொள்ளை பற்றி சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோடநாடு காணொலி குறித்து முதல்வர் பழனிசாமி மீது நடவடிக்கை, நேர்மையான ஐஜி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் ஆளுநரிடம் ஸ்டாலின் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
திமுக தலைவர் ஸ்டாலின் கிண்டி ராஜ்பவனில் ஆளுநரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அவருடன் கனிமொழி, அ.ராசா, டி.ஆர். பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆளுநரிடம் வழங்கியுள்ள மனு விவரம்:
11.1.2019 அன்று பத்திரிக்கையாளர் மாத்யூ டெல்லியில் பத்திரிகை நிருபர்களை சந்தித்து, அதிர்ச்சி தரும் தகவல் அடங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஓய்வு இல்லமான கோடநாடு பங்களாவில்நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கே.வி.சயன் என்ற ஷ்யாம் மற்றும் வயலார் மனோஜ் ஆகியோரின் பேட்டிகள் இடம் பெற்றுள்ளன.
அப்பேட்டியில், தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி சொன்னதால்தான் கோடநாடு பங்களாவிற்கு கொள்ளையடிக்கச் செல்கிறோம் என்று இந்த சதித்திட்டத்தை தீட்டிய கனகராஜ் (தற்போது இறந்து விட்டார்) தங்களிடம் கூறியதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த விவகாரத்துடன் தொடர்பு படுத்தி மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய சில தேதிகளும், நிகழ்வுகளும் இருக்கின்றன.
அவை:
5.12.2016 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்தார்.
14.2.2017 லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்கில் சசிகலா உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்.
15.2.2017 சசிகலா பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
16.2.2017 எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவி ஏற்றார்.
24.2.2017 முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில்காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டது.
28.4.2017- 8.45 மணி கோடநாடு கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளியும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநருமான கனகராஜ் கார் விபத்தில் மரணம் அடைந்தார்.
29.4.2017-5.15 மணி கோடநாடு கொள்ளை வழக்கில் இரண்டாவது குற்றவாளியான கே.வி. சயன் என்ற ஷ்யாம் சென்ற கார் விபத்திற்குள்ளாகி, அவரது மனைவியும், மகளும் இறந்து விட்டார்கள்.
4.7.2017 கோடநாடு பங்களாவில் சிசிடிவி ஆப்பரேட்டராகவும், அக்கவுண்டன்டாகவும் இருந்த தினேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
11.1.2019 கோடநாடு பங்களாவில் உள்ள கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்ஸ், பென் டிரைவ்ஸ், டாக்குமென்டுகள் போன்றவற்றை எடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு கொடுப்பதற்காகவும்,
அவர் சொன்னதன் பேரிலும் பங்களாவில் கொள்ளையடித்ததாக இரண்டாவது குற்றவாளியான ஷ்யாம் என்ற சயன் வாக்குமூலம் கொடுத்த வீடியோ வெளியானது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சோளூர் மட்டம் காவல் நிலைய ஆய்வாளர் கோடநாடு பங்களா கொள்ளை மற்றும் கொலை வழக்கினை விசாரித்து, நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல்செய்துள்ளார்.
தற்போது இந்த வழக்கு (செசன்ஸ் கேஸ் 3/2018) நீலகிரி மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில்விசாரிக்கப்பட்டு வருகிறது.
வழக்கின் அடுத்த விசாரணை வருகின்ற 2.2.2019 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சயன் என்ற ஷ்யாம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 120, 147,148,149,324,342,447,449,395,397,396 302 போன்ற பிரிவுகளின் கீழ் உள்ள வழக்கிற்கு எடப்பாடி பழனிசாமியே முழுக்காரணம் என்ற ரீதியில் குற்றம் சாட்டியிருக்கிறார்.
அதில் எடப்பாடி பழனிசாமிதான் கொள்ளையடிக்கச் சொன்னார் என்று சதித் திட்டத்தில் உடந்தையாக இருந்த கனகராஜ் தன்னிடம் சொன்னதாகவும் சயன் கூறியிருக்கிறார்.
சயன் என்ற ஷ்யாம் வாக்குமூலம் முக்கியமான ஆதாரம் மட்டுமின்றி இந்தியதண்டனைச் சட்டப் பிரிவு 10-ன்படி வழக்கிற்கு தொடர்புடைய ஆதாரமும் ஆகும்.
ஒரு வழக்கில் புதிய தகவல்கள், ஆதாரங்கள் கிடைத்தால் குற்றவியல் விசாரணை நடைமுறைச்சட்டப் பிரிவு 173 உட்பிரிவு 8-ன் கீழ் எந்த நேரத்திலும் மேல் விசாரணை நடத்தலாம் என்பது தெளிவான சட்ட விதிமுறை.
அதே போன்று யாருக்கு எதிராக புதிய ஆதாரங்கள் வெளிவந்தாலும் அவரை சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்பதும், சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பதும் கூட தெளிவான சட்ட நடைமுறையாகவே இருந்து வருகிறது.
ஆகவே ஷ்யாம் என்ற சயன் கொடுத்துள்ள வாக்குமூலம் மேல் விசாரணைக்கு உகந்ததாகவும், குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 173(8)-ன் கீழ் நடவடிக்கைஎடுப்பதற்கு ஏற்றதாகவும் இருக்கிறது.
இது போன்று புதிய ஆதாரங்கள் வெளிவரும் போது வழக்கமாக அந்த வழக்கின் புலனாய்வு அதிகாரி மேற்கண்ட பிரிவின்கீழ் மேல் விசாரணை செய்வதற்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் மனு போட்டிருக்க வேண்டும்.
ஆனால் வெளிவந்துள்ள ஆதாரங்கள் முதல்வருக்கு எதிராக இருப்பதால், அந்த வீடியோவை வெளியிட்டவர்கள் மீதே வழக்குப் போட்டு காவல்துறை விசாரித்துக் கொண்டிருக்கிறது.
வாக்குமூலம் கொடுத்த சயன் மற்றும் வயலார் மனோஜ் ஆகியோரை அதிமுக நிர்வாகி ராஜ் சத்யன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் டெல்லியில் தமிழக காவல்துறை கைதுசெய்திருப்பதாக பத்திரிகைகளில் தற்போது செய்தி வந்துள்ளது.
கோடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கில் மேல் விசாரணை நடத்துவதற்கு பதில் பொய் வாக்குமூலம் கொடுத்தார்கள் என்று கூறி இந்த இருவரையும் தமிழக காவல்துறை கைது செய்திருப்பது சட்டவிரோத செயலாகும்.
ஆதாரங்களைஅழிக்கவும், குற்றத்தை மறைக்கவும் தமிழக காவல்துறை இப்படி கைதுகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.
ஆகவே நேர்மையான ஐ.ஜி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக்குழு (Special Investigation Team) அமைத்து முன்னாள் முதல்வர் இல்லத்தில் இந்நாள் முதல்வர் சொன்னதன் பேரில் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்படும் கொள்ளை குறித்து தீவிர விசாரணை நடத்தினால் மட்டுமே, கோடநாட்டில் நிகழ்ந்த கொடிய குற்றத்தின் உண்மைப் பின்னணி வெளியில் வரும்.
உண்மைக் குற்றவாளிகளை தண்டிக்க மட்டுமின்றி- சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும்- முதல்வர் பதவிக்குரிய கண்ணியத்தைக் காப்பாற்றவும் இந்த குற்றச்சாட்டுகள் மீது மேல் விசாரணை நிச்சயம் நடத்தப்பட வேண்டும்.
ஆகவே தமிழக எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும், தமிழக மக்களின் சார்பாகவும் இந்த தருணத்தில் தமிழக ஆளுநரை கேட்டுக்கொள்வது யாதெனில்,
1. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கூறப்பட்டுள்ள கொலைக் குற்றம் குறித்து குடியரசுத் தலைவருக்கு தெரிவித்து, அரசியல் சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
2. பாரபட்சமின்றியும், நேர்மையாகவும் விசாரணை நடைபெற எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து விலகுமாறு அறிவுறுத்த வேண்டும்.
3.நேர்மையான ஐ.ஜி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை ஏற்படுத்தி, நீலகிரி மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு எண் செசன்ஸ் 3/2018-ல் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் உள்ள புதிய ஆதாரங்களின் அடிப்படையில் மேல் விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
4. கனகராஜின் மர்ம மரணம் குறித்து மேல் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் கொடுத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.