‘‘ரஃபேல்’’ போர் விமான பேரம் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் : ஸ்டாலின் வலியுறுத்தல்…

‘‘ரஃபேல்’’ போர் விமான பேரம் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் : ஸ்டாலின் வலியுறுத்தல்…

‘‘ரஃபேல்’’ போர் விமான பேரம் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை என்று முழக்கமிட்டு மக்களை ஏமாற்றுவதையும், எதிர்க்கட்சிகள் பொய் சொல்கின்றன என்ற ஆதாரமற்ற பிரச்சாரத்தையும்

பிரதமர் தொடர்ந்து கூறுவதை கைவிட்டு நாட்டின் பாதுகாப்பில் உள்ளபடியே அக்கறை இருக்குமென்றால் ‘‘ரஃபேல்’’ போர் விமான பேரம் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒரு தகவலையும் வெளியே விடாமல் அனைத்து விபரங்களையும் பரம ரகசியமாக வைத்துக்கொண்டு கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் நேரடியாகப் பதிலே சொல்லாமல்

“ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெறவில்லை” என்று பிரதமர் நரேந்திரமோடி செயற்கையாக அணிந்திருந்த “போலி பாதுகாப்பு கவசம்” இந்து திரு என்.ராம் அவர்கள் ஆங்கில “இந்து” பத்திரிகையில் எழுதியுள்ள

“36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்கலாமென மோடி எடுத்த முடிவின் காரணமாக, ஒவ்வொரு விமானத்தின் விலையும் 41 சதவீதம் அதிகமாகிவிட்டது (Modi’s decision to buy 36 Rafaels shot the price of each jet by 41 percent)”

என்ற நாட்டு மக்கள் நம்பி ஏற்றுக்கொள்ளத் தகுந்த ஆதாரங்கள் நிறைந்த இயற்கையான புலனாய்வுக் கட்டுரை மூலம், “கழற்றி” வீசப்பட்டு – மத்திய பா.ஜ.க. அரசின் கவைக்கு உதவாத வாதங்கள் எல்லாம் சுக்கு நூறாக நொறுக்கி வீழ்த்தப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பிற்கான ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதலில் நாட்டு மக்களுக்கு அளித்தே தீரவேண்டிய நியாயமான விளக்கத்தை அளிக்க மறுத்து,

தானே தரையில் விழுந்து கும்பிட்டு மரியாதை செலுத்திய ஜனநாயகத்தின் பிரம்மாண்ட சின்னமான பாராளுமன்றத்திற்கும் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து – உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முன்பே தகவல்களைச் சொல்ல முடியாது என்று

எல்லாவற்றையும் மூடிமறைத்து அடாவடி செய்தது பா.ஜ.க. அரசு. இதுவரை ரஃபேல் ஊழலே நடக்கவில்லை என்று வீராப்புப் பேசிய மத்திய பா.ஜ.க. அரசின் பாதுகாப்பு அமைச்சர், நிதியமைச்சர்,

சட்ட அமைச்சர் – ஏன் பிரதமர் நரேந்திரமோடி ஆகிய அத்தனை பேரின் முகமூடியும் கிழித்து தொங்கவிடப்பட்டு, “இமாலய ஊழல்” இப்போது வெளியே வந்து இந்திய மக்கள் மத்தியில் நாற்றமடிக்கத் தொடங்கி விட்டது.

பல முக்கியத்துவம் வாய்ந்த புலனாய்வுக் கட்டுரைகளை மக்களுக்குத் தந்த பத்திரிகையுலக ஜாம்பவான் என்று கருதப்படும் திரு என். ராம் அவர்களின் கட்டுரையில் உள்ள அதிர்ச்சிதரும் தகவல்கள் –

நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பிற்கான ஒப்பந்தம் ஒன்றில் பிரதமர் திரு நரேந்திரமோடி ஆழமான உள்நோக்கத்துடன் ஆரம்பத்திலிருந்தே தன்னிச்சையாகச் செயல்பட்டு –

அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த திரு மனோகர் பாரிக்கர் அவர்களுக்கும் நெருக்கடி கொடுத்து எவ்வளவு மோசமான முறைகேடுகளுக்கு வித்திட்டுள்ளார் என்பது கடைசியில் “பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது” என்ற கதையாகியிருக்கிறது.

இந்துப் பத்திரிக்கையில் வெளிவந்துள்ள சில முக்கிய முறைகேடுகள்:-

விமானத்தில் இந்தியாவுக்கு ஏற்ற வடிவமைப்பு மற்றும் தேவைக்கேற்ற மாற்றங்கள் (Design and Development) அடங்கிய 13 குறிப்பிட்ட அம்சங்கள் (13 Specifications) இடம்பெற வேண்டும் என்று கூறி 1.3 பில்லியன் டாலர் அதிகமாகக் கொடுப்பதற்கு பிரதமர் ஒப்புக் கொண்டதால்

ஒரு ரஃபேல் போர் விமானத்தின் விலை முன்பு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நிர்ணயிக்கப்பட்டதை விட பா.ஜ.க. ஆட்சியில் 41.42% சதவீதம் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்ற போது “126 ரஃபேல் போர் விமானங்களிலும் இதுபோன்ற இந்தியாவிற்கு ஏற்ற 13 அம்சங்கள் (13 Specifications) இடம்பெற வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் பா.ஜ.க. அரசு இதை 36 ரஃபேல் போர் விமானங்களுக்கு மட்டும் செய்தால் போதும் என்று குறைத்து விட்டது.

இரு நாட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் “விலை பற்றிய விவரங்களை வெளியிட முடியாது” என்று மத்திய பா.ஜ.க. அரசு சொன்னது. ஆனால் ஒப்பந்தத்தில் அப்படி தடையேதும் இல்லை.

அதிக விலை கொடுத்து போடப்படும் இந்த ஒப்பந்தத்திற்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் மூன்று உயரதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். ஆனால் அந்த எதிர்ப்பை மத்திய பா.ஜ.க. அரசு நிராகரித்துள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த திரு மனோகர் பாரிக்கர் தலைமையிலான தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரம் இருந்தும்

இந்த “ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை” அப்ரூவ் பண்ணவில்லை. பிரதமருக்கே போகட்டும் என்று விட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஈரோ டைஃபூன் கன்சார்ட்டியம் (Euro Typhoon Consortium) என்ற நிறுவனம் அளிக்க முன் வந்த “20 சதவீத விலை தள்ளுபடியை”

மத்திய பா.ஜ.க. அரசு சாதகமாக பயன்படுத்தியிருந்தால் பிரான்சிடமிருந்து வாங்கும் 36 ரஃபேல் போர் விமானங்களின் விலையை பெருமளவு குறைத்திருக்க முடியும். அதை பா.ஜ.க. அரசு செய்யவில்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 126 போர் விமானங்களை வாங்கும் அதே விலையில்

மேலும் 50 சதவீத போர் விமானங்களை வாங்கிக் கொள்ளலாம் என்று பேசி முடிக்கப்பட்ட தொடர் நடவடிக்கை (Follow on) என்ற நிபந்தனையை (கிளாஸை) பா.ஜ.க. அரசு கைவிட்டது.

பிரான்ஸ் அரசாங்கத்திடம் இறையாண்மை மிக்க உத்தரவாதம் (Sovereign Guarantee) பெற வேண்டும் என்ற பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் ஆலோசனையை பா.ஜ.க அரசு ஏற்காமல் நிராகரித்தது.

போர் விமானங்களை வழங்கும் “டஸால்ட் ஏவியேசன்” கம்பெனியின் நிதி நிலவரத்தைப் பார்த்தால் அரசு வாங்கியுள்ள சாதகமானது எனச் சொல்லப்படும் கடிதம் (Letter of Comfort) ஆபத்தானது.

இவ்வளவு முறைகேடுகள் நிறைந்த ரஃபேல் ஒப்பந்தத்திற்கு யார் ஒப்புதல் அளித்தது தெரியுமா? “ஊழலை ஒழிப்பேன்” “நாட்டின் பாதுகாப்பே எனக்கு மிக முக்கியம்”

“பாதுகாப்பு பிரச்சினையில் இப்படி எதிர்க்கட்சிகள் பொய் குற்றச்சாட்டு கூறலாமா?” என்றெல்லாம் பேசி நாடகமாடி வரும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான “நாட்டின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு (Cabinet Committee on Security) தான் என்ற தகவலை

“இந்து பத்திரிகையில்” படித்த போது பேரதிர்ச்சியடைந்தேன். ஆனால் இத்தகையை பிரமாண்டமான புலனாய்வு கட்டுரைக்கு உரிய விளக்கத்தை அளிக்கக்கூட முடியாமல்

“அனைத்திற்கும் ஏற்கனவே பதில் சொல்லப்பட்டு விட்டது” என்று பூசிமெழுகிய ஒரு விளக்கத்தை மட்டுமே பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்களால் கூற முடிந்திருக்கிறது.

ஊழலை கண்காணிக்க வேண்டிய “மத்திய விழிப்புணர்வு ஆணையத்தை” சொன்னபடியெல்லாம் ஆடும் கைப்பாவையாக்கி, ஊழலை விசாரிக்க வேண்டிய சி.பி.ஐ. அமைப்பினையும் சீர்குலைத்து,

உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும் ஊழலை ஒழிக்கும் லோக்பால் அமைப்பை இன்றுவரை உருவாக்க மறுத்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க. அரசுக்கோ,

பிரதமர் நரேந்திர மோடிக்கோ “எங்கள் நான்கரை ஆண்டு கால ஆட்சியில் ஊழலே நடக்கவில்லை” என்று முழக்கமிட துளியும் தகுதியில்லை என்பதை இந்து ராம் அவர்களின் கட்டுரை தோலுரித்துக் காட்டியிருக்கிறது.

ஆகவே இனியும் எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை என்று வெற்று வாய்ச்சவடால் முழக்கமிட்டு மக்களை ஏமாற்றுவதையும்,

எதிர்க்கட்சிகள் பொய் சொல்கின்றன என்ற ஆதாரமற்ற பிரச்சாரத்தையும் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள் உடனடியாக கைவிட்டு பிரதமர் ஆசனத்தின் பெருமையை இப்போதாவது காப்பாற்ற முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நாட்டின் பாதுகாப்பில் பிரதமருக்கு உள்ள அக்கறையை விட அதிகமாகவே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், எதிர்கட்சிகளுக்கும் இருக்கிறது என்பதை பிரதமர் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே நாட்டின் பாதுகாப்பில் உள்ளபடியே அக்கறை இருக்குமென்றால், மடியில் கனமில்லை என்ற தைரியம் இருக்கிறதென்றால் ரஃபேல் போர் விமானப் பேரம் குறித்து

உடனடியாக “பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு” பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தரவிட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு : மாடு முட்டியதில் 2 பேர் உயிரிழப்பு

சொகுசு விடுதியில் காங்., எம்.எல்.ஏ.,க்கள் அடிதடி; காயத்துடன் ஒருவர் அப்பல்லோவில் அனுமதி..

Recent Posts