பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை நிறுத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப் பட்ட மனுவை ஏற்று மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
அதேசமயம், இந்த சட்டத்துக்கு தடை விதிக்க இயலாது எனத் தெரிவித்த நீதிமன்றம், விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்சாதியினருக்கு வேலைவாய்ப்பு, கல்வியில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா இம்மாத தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, சட்டமாகியுள்ளது.
இந்தச் சட்டத்தின்படி, ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை வருமானம் உள்ளோர் இந்த சலுகையை பெற தகுதியானவர்கள். 5 ஏக்கருக்கு அதிகமான விவசாய நிலம் வைத்திருப்போர்,
ஆயிரம் சதுர அடிக்கு அதிகமான வீட்டில் குடியிருப்போர், நகராட்சி பகுதியில் 100 அடிக்கு அதிகமான இடத்திலும்,
நகராட்சி இல்லாத இடத்தில் 200 அடிக்கு அதிகமான இடத்திலும் குடியிருப்போர் இந்த சலுகையை பெற இயலாது.
இந்த சட்டம் தற்போது இமாச்சலப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் நடைமுறைக்கு வந்துவிட்டது.
அடுத்த நிதியாண்டில் இருந்து மத்திய அரசு அனைத்துத் துறைகளிலும் நடைமுறைப்படுத்த இருக்கிறது.
இந்நிலையில், கவுசல் காந்த் மிஸ்ரா மற்றும் இளைஞருக்கான சமத்துவ அமைப்பு ஆகிய இணைந்து இந்த சட்டத்தை நிறுத்திவைக்கக் கோரி கடந்த 10-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
ஆனால், இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாகிவிட்டது.
இந்நிலையில் இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரரின் முக்கியக் கோரிக்கையான, 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை நிறுத்திவைக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
அதேசமயம், விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதிகள் சம்மதம் தெரிவித்தனர்.
மனுதாரரின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.