வங்கி ஊழியர்கள் கலக்கம்; வங்கியின் பங்குகளை வாங்கக் கட்டாயப்படுத்தும் அதிகாரிகள்: கடனுதவியும் ஏற்பாடு

வங்கியின் பங்குகளை வாங்கக் கோரி, பணியாற்றும் ஊழியர்களை உயர் அதிகாரிகள் வற்புறுத்துவதால் ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

பணம் இல்லை என்று ஊழியர்கள் தெரிவித்தாலும், வங்கியின் பங்குகளை வாங்குவதற்குக் கடனுதவியும் செய்து தருவதாக அதிகாரிகள் கூறுவதால்,

என்ன செய்வதென்று தெரியாமல் ஊழியர்கள் கையைப் பிசைந்து கொண்டு இருக்கிறார்கள்.

மத்திய அரசு இந்தத் திட்டத்தை ஊக்கப்படுத்தும் நிலையில், வங்கி ஊழியர்கள் சங்கமோ இதை எதிர்த்து வருகிறது.

பல்வேறு அரசு வங்கிகளில் ஊழியர்கள் பங்கு கொள்முதல் திட்டம் (இஎஸ்பிஎஸ்) கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு வங்கியில் பணியாற்றும் ஊழியர்கள் குறிப்பிட்ட மதிப்புக்கு அந்த வங்கியின் பங்குகளை வாங்க முடியும்.

இதன் மூலம் மத்திய அரசின் பங்குகளை விற்கும் திட்டமும் எளிதாகி வந்தது.

இந்தத் திட்டத்தின் கீழ் 6-க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகள் தங்கள் ஊழியர்களுக்குப் பங்குகளை விற்கும் திட்டத்தைத் தொடங்கிவிட்டன.

சில வங்கிகள் பங்குகளை விற்கும் திட்டத்தை முடித்துவிட்டன. குறிப்பாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, சிண்டிகேட் வங்கி, விஜயா வங்கி, பேங்க் ஆப் இந்தியா, யுசிஓ வங்கி, ஆந்திரா வங்கி, உள்ளிட்ட வங்கிகள் தொடங்கி உள்ளன.

இந்த வங்கிப் பங்குகளை விற்கும் திட்டம் குறித்து ‘தி இந்து’விடம் (ஆங்கிலம்) சில வங்கி ஊழியர்கள் கூறுகையில், ”வங்கியில் பணியாற்றும் ஊழியர்கள் அந்தந்த வங்கியின் பங்குகளை வாங்க கட்டாயமாக்கப்படுகிறது.

ஆனால், இதற்கு முறையான உத்தரவு ஏதும் இல்லாத நிலையில், உயர் அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.

நடுத்தரமான அரசு வங்கியில் பணியாற்றும் ஊழியர்களின் பணி தரத்துக்கு ஏற்ப பங்குகள் வாங்க வற்புறுத்தப்படுகிறது.

கிளார்க் வரையிலான பணியாளர்களை ஆயிரம் பங்குகள் வாங்க வேண்டும் என்றும், உயர் அதிகாரிகளை, 10 ஆயிரம் பங்குகள் வாங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுபோல் அதிகாரிகள் வகிக்கும் பதவிக்கு ஏற்ப பங்குகள் வாங்கும் அளவும் அதிகரிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மிகப்பெரிய பொதுத்துறை வங்கி இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தது.

அதன் பொதுமேலாளர்கள் ஒவ்வொருவரும் 7 ஆயிரம் பங்குகள் வாங்கக் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

அனைவரும் பங்குவாங்கும் திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர்” எனத் தெரிவித்தனர்.

அனைத்து இந்திய மஹாராஷ்டிரா வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தேவிதாஸ் துல்ஜாபுர்கர் கூறுகையில்,

”அனைத்து ஊழியர்களும் டிமேட் கணக்கு தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவுக்கு நிர்வாகம் சார்பில் முறையான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால் வங்கிகள் பங்கு விற்பனைத் திட்டத்தை கொண்டுவந்துள்ளது எனத் தெரிந்து கொண்டோம்.

ஊழியர்கள் பங்கு வாங்க பணம் இல்லை என்றாலும், பங்குகள் வாங்குவதற்கு குறைந்த வட்டியில் கடன் தருகிறோம் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது” எனத் தெரிவித்தார்.

ஆனால், வங்கியின் பங்குகளை ஊழியர்களுக்கு விற்பனை செய்யப்படுவதை ஊழியர்கள் சங்கம் எதிர்த்து வருகிறது.

இது குறித்து அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாச்சலம் கூறுகையில்,

”சில பொதுத்துறை வங்கிகள் முதலீடு திரட்டுவதற்காக தங்களின் பங்குகளை ஊழியர்களிடம் விற்று முதலீடு திரட்டுகின்றன.

அரசு வங்கிகளை தனியார்மயமாக்கும் அனைத்து முயற்சிகளையும் எதிர்ப்போம். வங்கியின் பங்குகளை தனியாருக்கு விற்பதையும் எதிர்ப்போம்.

அது தனியாருக்கு விற்றாலும், கார்ப்பரேட்டுக்கு விற்றாலும் எதிர்ப்போம்” எனத் தெரிவித்தார்.