ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் கேப்டன் விராட் கோலி தனது 41-வது சதத்தைப் பதிவு செய்தார்.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது.
முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகிக்கிறது.
இரு அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, கவாஜா 104 ரன்களும், பிஞ்ச் 93 ரன்களும் எடுத்தனர்.
314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது.
ஷிகர் தவான் (1), ரோகித் சர்மா (14), அம்பதி ராயுடு (2), தோனி (26) என வரிசையாக வெளியேறினர். இந்திய அணி 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஆனால், கேப்டன் விராட் கோலி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார். 50 ரன்கள் வரை பொறுமையாக விளையாடி கோலி அதன்பிறகு ரன் வேகத்தை அதிகரித்தார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 85 பந்துகளில் 14 பவுண்டரிகள் உள்பட 101 ரன்கள் அடித்தார்.
இதன்மூலம், சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் கோலி தனது 41-வது சதத்தைப் பதிவு செய்தார். ஏற்கனவே, கடந்த போட்டியில் கோலி சதம் அடித்து அசத்தியிருந்தார்.