இரமலான் பெருநாள் இஸ்லாமிய மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி!…
தி.மு.கவிற்கும் – இஸ்லாமிய சமுதாயத்தினருக்குமான நல்லுறவு – பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் என நீடித்து நிலைத்து – தற்போதும்தொடர்ந்து வருகிறது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம் நாளும் தழைத்திட இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரமலான் திருநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “
அன்பிற்கு இலக்கணமாக, இரக்கம் – கருணையின் அடையாளமாக, ஈகைக் குணத்தின் வெளிப்பாடாகத் திகழும் இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதயபூர்வமான இரமலான் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“கொரோனா” பேரிடர் காலத்தில் – “தனித்திருப்போம்” என்ற மருத்துவ நெறிமுறைகளைக் கடைப்பிடித்து – மிகுந்த நெருக்கடியிலும் – தங்களை வருத்திக் கொண்டு – நோன்பைக் கடைப்பிடித்துள்ள இஸ்லாமிய சமுதாய மக்களின் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும், திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் அயராது பாடுபட்டு வருகிறது என்பதை இஸ்லாமியர் அனைவரும் அறிவர். சமூக, பொருளாதார திட்டங்களையும், பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவித்து – அவற்றைத் திறம்பட கழக அரசு நிறைவேற்றியும் இருக்கிறது.
1969-ல் மிலாதுநபிக்கு முதன்முதலில் அரசு விடுமுறை; உருது பேசும் முஸ்லிம்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது; இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் சமுதாய மக்கள் பயனடைய “சிறுபான்மையினர் நல ஆணையம்” துவங்கியது;
ஓய்வூதியம் பெற்று வந்த 2000 உலமாக்களின் எண்ணிக்கையை 2400 வரை உயர்த்தியது; முதன்முறையாக வக்ஃபு வாரியச் சொத்துகளைப் பராமரிப்பதற்கென 40 லட்சம் ரூபாய் மானியம் வழங்கியது என்று பல்வேறு சாதனைத் திட்டங்கள் அதில் அடங்கும்.
`தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்” “உருது அகாடமி” தொடங்கியது, “காயிதே மில்லத் மணிமண்டபம்” அமைத்திட நிதி ஒதுக்கி, அடிக்கல்லும் நாட்டி கட்டி முடிக்கத் தொடர் நடவடிக்கை எடுத்தது என்ற சாதனைகளுக்கு இடையே – இஸ்லாமியர்களுக்கு, பிற்படுத்தப்பட்டோருக்கான 30 விழுக்காட்டில் 3.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கியது கழக சாதனைகளுக்கு எல்லாம் மணிமகுடமாகும்!
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் – இஸ்லாமிய சமுதாயத்தினருக்குமான நல்லுறவு – பேரறிஞர் பெருந்தகை அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் என நீடித்து நிலைத்து – தற்போதும் அது தொடர்ந்து வருகிறது.
இஸ்லாமியர்களுக்கு என்ன சோதனை- எப்பக்கத்தில் இருந்து வந்தாலும், தப்பாமல் குரல் கொடுத்து – உரிமை போற்றும் உண்மைப் பாதுகாவலனாக திராவிட முன்னேற்றக் கழகம் முன்னணியில் நின்று வருகிறது.
ஒப்பற்ற இந்தச் சமுதாயத்தின் வாழ்க்கைத் தரமும் – நல்வாழ்வும் மேலும் உயர்ந்து, சிறப்பாக அமைந்திடவும், சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம் நாளும் தழைத்திடவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த இரமலான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்து மகிழ்ச்சி கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.