பொருளாதாரம் கரோனாவினால் முடங்கியதற்குக் காரணம் கடவுள் செயல் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வர்ணித்ததையடுத்து, ப.சிதம்பரம், ‘கடவுளின் தூதரான நிதியமைச்சர், கரோனாவுக்கு முன்பே பொருளாதாரத்தை மோசமாக நிர்வகித்ததை எப்படி விளக்கப் போகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழனன்று பொருளாதாரம் கரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டது, கரோனா கடவுளின் செயல் என்று கூறியதுதான் ப.சிதம்பரத்தின் விமர்சனத்துக்குக் காரணமாகும்.
இதனையடுத்து ‘கடவுளின் செயல்’ கருத்துக்கு ப.சிதம்பரம் விமர்சனம் வைக்கும் போது, “பெருந்தொற்று கடவுளின் செயல் என்றால் 2017-18, 2018-19, 2019-20 ஆகிய ஆண்டுகளில் நிதியையும் பொருளாதாரத்தையும் மோசமாகக் கையாண்டதை எப்படி நாம் விளங்கிக் கொள்வது, அதாவது பெருந்தொற்றுக்கு முன்பே பொருளாதாரத்தை தவறாக நிர்வகித்ததற்கு என்ன விளக்கம்?
கடவுளின் தூதரான நிதியமைச்சர் இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பாரா? ஜிஎஸ்டியினால் மாநிலங்களின் வருவாய் இழப்புக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்காமல் மாநிலங்களுக்கு இரண்டு தெரிவுகளை வழங்கியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
இரண்டு தெரிவுகளில் முதல் தெரிவு சந்தையிலிருந்து திரட்டிக் கொள்ளுமாறு கூறியது, அதாவது நிதிச்சுமை முழுதும் மாநிலங்களின் தலையிலேயே விழும்.
மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கிய இரண்டாவது ஆலோசனையில் ஆர்பிஐ மூலம் ஈடுகட்டிக் கொள்வது. இதுவும் வேறொரு பெயரில் சந்தையிலிருந்து கடன் வாங்குவதுதான். மீண்டும் ஒட்டுமொத்த நிதிச்சுமையும் மாநிலங்கள் தலையில்தான் விழும்.
இது முழு துரோகம் என்பதோடு சட்டத்தை மிக நேரடியாக மீறுவதாகும்” என்று ப.சிதம்பரம் தொடர் ட்வீட்களில் விமர்சனம் செய்துள்ளார்.