ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு எம்.பி. கனிமொழி தலைமையில் திமுக மகளிரணியினர் கவர்னர் மாளிகை நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயதான பட்டியலினப் பெண் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தார்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்துக்கு எதிர்கட்சிகள் உள்பட அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். குடும்பத்தாரிடம் கூட பெண்ணின் உடலை காட்டாமல் போலீசார் அவசர அவசரமாக நள்ளிரவில் எரித்தது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அனைத்து மாநிலங்களிலும் எதிர்கட்சிகள் மட்டுமல்லாமல் பெண்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மேலும், நீதி கேட்டு ஹத்ராஸ் செல்ல முயன்ற ராகுல்காந்தி மற்றும் பிரியங்காகாந்தி மீது தாக்குதல் நடத்திய சம்பவமும் உத்தரபிரதேச போலீசாரின் நடவடிக்கையும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில், உத்தரப்பிரதேச அரசு தனது தவறுகளைத் திருத்திக் கொண்டு, கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும். இதனைச் செய்ய மத்திய அரசு, உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இந்த உணர்வுகளை மத்திய அரசுக்குத் தமிழக கவர்னர் எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்காக திமுக மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தலைமையில் திமுக மகளிரணியினர் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு கவர்னர் மாளிகை நோக்கி அணிவகுத்து பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
பேரணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பேரணியாக சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் மனு அளிக்க உள்ளனர். பெண்கள் பாதுகாக்க வேண்டும் என் வாசகம் அடங்கிய முககவசம் அணிந்து பேரணியில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.
பேரணியை தொடங்கி வைத்து உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உத்திரப்பிரதேசத்தில் அப்பாவி இளம்பெண்ணை 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ளனர்.
பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் உடலை அவசர அவசரமாக எரித்துள்ளனர். உ.பி.யில் நீதிகேட்டு சென்று ராகுல் காந்தியை கீழே தள்ளியுள்ளனர்.
ராகுல் காந்தியை தள்ளிவிடவில்லை; ஜனநாயகத்தையே ஆட்சியார்கள் கீழே தள்ளி உள்ளனர் என்றார். பாலியல் வன்கொடுமைகள் அதிகம் நடக்கும் முதல் மாநிலம் உத்திரப்பிரதேசம், பாலியல் வன்கொடுமைகள் அதிகம் நடக்கும் 2-வது மாநிலம் தமிழ்நாடு.
உத்திரப்பிரதேசம் இன்று ரத்தப்பிரதேசமாக மாறிக் கொண்டு இருக்கிறது. இதை தடுக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சிபிஐ விசாரணை நியாயமாக நடைபெறுமா என்பது சந்தேசகம் என்றார். நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடைபெற வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார்.
பேரணியாக சென்ற கனிமொழி கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் வாகனத்தை செல்ல விடாமல் சாலையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினர்.