கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு தனது மகளை கடத்திவிட்டதாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு – சவுந்தர்யா திருமணம் நேற்று நடந்தது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணின் தந்தை சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் பிரபு(வயது 34). இவர் தியாகதுருகம் தாய் நகர் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் பிரபு எம்.எல்.ஏ.வும், தியாகதுருகத்தை சேர்ந்த சவுந்தர்யா(19) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
சவுந்தர்யா திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களின் காதல் விவகாரம் தெரியவரவே சவுந்தர்யா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் பிரபு எம்.எல்.ஏ.-சவுந்தர்யா திருமணம் நேற்று அதிகாலை எளிமையான முறையில் நடைபெற்றது. தியாகதுருகம் தாய் நகரில் உள்ள எம்.எல்.ஏ.வின் இல்லத்தில் ஒன்றியக்குழு முன்னாள் தலைவரும், எம்.எல்.ஏ.வின் தந்தையுமான அய்யப்பா, ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவரும், எம்.எல்.ஏ.வின் தாயாருமான தைலம்மாள் ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்த திருமண நிகழ்ச்சியில் உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்த நிலையில் சவுந்தர்யாவின் தந்தை சாமிநாதன், திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.எல்.ஏ.வின் வீட்டின் முன்பு குடத்தில் கொண்டு வந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடோடி சென்று அவரை தடுத்து நிறுத்தினர்.
இது குறித்து வடதொரசலூர் கிராம நிர்வாக அலுவலர் காயத்ரி கொடுத்த புகாரின் பேரில் சாமிநாதன் தற்கொலைக்கு முயன்றதாக தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.