புத்தகத்தில் எழுதியுள்ள கருத்துக்காக எழுத்தாளர் மீது வழக்குப் போட்டு கருத்துரிமையைப் பறிக்கும் செயலைத் தமிழக அரசு செய்துள்ளதற்குக் கண்டனம் தெரிவிப்பதாகவும், வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
“பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன் ‘வேதவெறி இந்தியா’ குறித்து எழுதிய நூல், தமிழகத்தில் பரவலான வரவேற்பைப் பெற்றது.
வேதங்களின் உண்மைத் தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டிய அரிய நூல் அது. சில மாதங்களுக்கு முன்னால், காவல்துறை தமிழ்க் களத்திற்கு நேரில் வந்து அதுகுறித்து விசாரணை மேற்கொண்டது. இப்பொழுது அந்நூலில் உள்ள கருத்துகளுக்காகக் குற்ற அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்தியக் குற்ற இயல் சட்டப் பிரிவு 153 (கலகத்தை விளைவிக்கும் உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே ஆத்திரம் ஊட்டுதல்), பிரிவு 153 A(a) (b) (சமயம், இனம், பிறந்த இடம், குடியிருப்பிடம், மொழி முதலியவை காரணமாக வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையில் பகைமை / வெறுப்பு வளர்த்தல், ஒற்றுமை இன்மையைத் தோற்றுவித்தல்), பிரிவு 505 (a) (b) (c) (பொதுமக்களுக்கு அச்சம் / பீதியை விளைவிப்பதன் மூலம், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராகக் குற்றம் செய்யத் தூண்டப் படலாம் என்ற பயம் அல்லது பீதியை விளைவித்தல் மற்றும் ஒரு பிரிவு அல்லது வகுப்பு அல்லது சமூகம் ஆகியவற்றைச் சார்ந்தவர்களை வேறு பிரிவு அல்லது சமூகத்திற்கு எதிராகக் குற்றம் செய்யத் தூண்டும் உள்நோக்கத்துடன் உரை / பேச்சு / அறிக்கை என எதையும் வெளியிடுதல் அல்லது பரப்புதல்) சனாதனக் கருத்துகளை உயர்த்திப் பிடிப்பவர்களுக்கு ஆதரவாக, இத்தகைய சட்டப்பிரிவுகள் வேண்டுமென்றே ஏவப்பட்டுள்ளது.
ஒரு புத்தகத்தில் உள்ள கருத்துகளுக்காக அதனை எழுதியவர்கள் மீது நியாயமற்ற வகையில் நடவடிக்கை எடுப்பது ஏற்கத்தக்கது அல்ல. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமை மற்றும் பேச்சுரிமைக்கு எதிரானது இது. எழுத்தாளர்களுடைய உரிமைக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளை வழங்கி உள்ளது.
நியாயம் அற்ற வகையில் பொழிலன் மீது போடப்பட்ட வழக்கைச் சட்டவழியில் எதிர்கொள்ளலாம் எனினும், கருத்துரிமைக்கு எதிரான இப்போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வலியுறுத்துகின்றேன்”.
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.