திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள் ஒதுக்கீடு..

திமுக கூட்டணியில் பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. அறிவாலயத்தில் முறைப்படி இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

திமுக கூட்டணியில் பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்காததால் வருத்தத்தில் இருந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கேட்ட தொகுதிக்கும், திமுக சொன்ன தொகுதிக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக இருந்தது என காங்கிரஸ் கருதியது.
இதுபோன்ற ஒரு சூழ்நிலையை நான் எந்தக் காலத்திலும் சந்தித்தது இல்லை என செயற்குழுக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்கலங்கிக் கூறும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதை கேள்விக்குள்ளாகியது என்கிற கருத்து பரவலாகப் பேசப்பட்டது.

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின்போது தொகுதி எண்ணிக்கையில் ஏற்பட்ட மாறுபட்ட கருத்து காரணமாகத் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. காங்கிரஸ் கட்சிக்கு 18 தொகுதிகளுக்கு மேல் தருவதில்லை என்பதில் திமுக பிடிவாதம் காட்டியதால் தொடர்ந்து இழுபறி நீடித்தது.

54 தொகுதிகளை காங்கிரஸ் கேட்க 18 தொகுதிகள் என திமுக நிற்க, பேச்சுவார்த்தை இழுபறியானது. இதனால் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் நீடிக்குமா என்கிற கேள்வி எழுந்தது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்தது. மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், அக்கட்சியின் பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல் ஆகியோர் தங்கள் கூட்டணியில் காங்கிரஸ் இணைய விருப்பம் தெரிவித்தனர். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் அவசர் ஆலோசனையையும் நடத்தியது.

இச்சூழலில், மூன்றாவது அணிக்கு காங்கிரஸ் போவது சரியான முடிவல்ல. தமிழகத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகள் மட்டுமே தீர்மானிக்கும் கட்சிகள் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் முதல் தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து நேற்றிரவு திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டுக்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் வந்தனர். அவர்கள் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர்.

”கூட்டணி உறுதியானது. தலைவர்கள் அனைவரும் பேசினோம். காலை (இன்று) 10 மணிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது, எண்ணிக்கையை அப்போது கூறுகிறோம்” என்று தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

அதன்படி இன்று காலை அறிவாலயத்திற்கு முதலில் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் வந்தனர். பின்னர் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் வந்தனர். அனைவரையும் கனிமொழி வாசல் வரை வந்து அழைத்துச் சென்றார்.

பின்னர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-காங்கிரஸ் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். இதன் மூலம் கடந்த சில நாட்களாக நீடித்துவந்த பெரிய இழுபறி முடிவுக்கு வந்தது. திருச்சி கூட்டத்துக்குச் செல்வதை ஒத்தி வைத்துவிட்டு ஸ்டாலின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டப்பேரவைத் தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ”இந்த ஒப்பந்தம் மூலம் திமுக- காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் ஒரே நேர்க்கோட்டில் வந்துள்ளோம். மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என கே.எஸ்.அழகிரி பேட்டி அளித்தார்.

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் மிச்சம் இருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிறிய கட்சிகள் மட்டுமே. அதுவும் மார்ச் 8-ம் தேதிக்குள் முடிவுக்கு வந்துவிடும் எனத் தெரிகிறது. இதன் மூலம் திமுக தோழமைக் கட்சிகள் மீண்டும் ஒன்றுபட்டுத் தேர்தலைச் சந்திக்கின்றன. பலம் வாய்ந்த கூட்டணியாக தேர்தல் களத்திற்கு திமுக அணி வருகிறது.

சட்டப்பேரவைத் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக ..

கரோனா தடுப்பூசி மருந்து : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டுக்கொண்டார்

Recent Posts