கர்நாடகாவில் ராகுல் காந்தி நடத்தி வரும் ஒற்றுமை இந்தியா நடைப்பயணத்தில் சோனியா காந்தியும் பங்கேற்றுள்ளார். கன்னியாகுமரியில் நடைபயணம் தொடங்கிய ராகுல் காந்தி, கேரளாவை தொடர்ந்து தற்போது கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
கர்நாடகாவில் 6 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் வரவிருக்கும் நிலையில், ராகுல் நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு ஊக்கம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைசூருவில் தனது நடைப்பயணத்தை முடித்துக்கொண்ட ராகுல்காந்தி, தசரா பண்டிகையை முன்னிட்டு 2 நாட்கள் இடைவெளி எடுத்துக்கொண்டார்.
இந்நிலையில் மாண்டியா மாவட்டம் பாண்டவபூரா அருகே பேலாலே கிராமத்தில் இருந்து தனது பயணத்தை அவர் தொடங்கியுள்ளார். 29 நாளாக நடைபயணம் மேற்கொள்ளும் அவருடன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இணைந்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரந்தீப்சிங் சுர்ஜேவாலா கூறுகையில், கர்நாடகாவில் ஊழல் ஆட்சி நடக்கிறது. ஊழலை அம்பலப்படுத்துவதே எங்கள் நோக்கம். பாஜக ஆட்சியாளர்கள் 40 கமிஷன் பெற்றுக்கொண்டு வளர்ச்சி பணிகளுக்கு அனுமதி அளிக்கின்றனர்.
இது தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். ஆனால் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை. கர்நாடகாவில் ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்று கூறினார். ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியுடன் பிரியங்கா காந்தியும் நடைப்பயணத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் மட்டும் ராகுல்காந்தி 22 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.