ஒரு ஜனநாயக நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது மதவாதமா? ஊழலா?
ஏதோ பட்டிமன்றத்தின் தலைப்பைப் போல எள்ளலோடு ஒரு காலத்தில் பார்க்கப்பட்ட இந்தக் கேள்வி, இருபத்தோராவது நூற்றாண்டு இந்தியாவை உள்ளிருந்து உறுத்தும் மிகக் கூர்மையான கேள்வியாக தற்போது மாறியுள்ளது.
அதிலும், 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைத் தீர்மானிக்கும் வாக்குவங்கிக்கான அரசியல் கேள்வியாகவும் அது தற்போது உருவெடுத்துள்ளது.
இதுவரை இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல விரும்பாமல் தப்பித்துக் கொண்டிருந்த சாமானியனுக்கும் கூட இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நெருக்கடி தற்போது ஏற்பட்டுள்ளது.
பாரதிய ஜனதாவுக்கு ஆபத்பாண்டவராகவும், காங்கிரஸ் தலைமையிலான அரசு தந்த கசப்பிலும், சலிப்பிலும் வெறுத்துப் போயிருந்த எளியவர்களுக்கு கலியுகப் பரந்தாமனாகவும் காட்சிதரும் நரேந்திர மோடி, அந்த நெருக்கடிக்கான உந்து சக்தியாக மாறியிருக்கிறார்.
போகட்டும்.
காங்கிரசின் ஊழலையோ, அக்கறையற்ற ஆட்சி முறையையோ யாரும் நியாயப்படுத்திவிட முடியாதுதான்.
அதே நேரத்தில் ஊழல் என்பது மிக எளிய மனிதரையும் கூட உடனடியாகக் கோபப்பட வைக்கும் ஒரு வெளிப்படையான நிர்வாகக் குற்றம்.
மதம் என்பது அப்படியல்ல. மனமா, புத்தியா, நாடியா, நரம்பா என எங்கிருந்து ஊற்றெடுத்து, எதன்வழியாக ஊடுருவுகிறது என்றே தெரியாமல் மனிதனுக்குள் புகுந்து ஆட்கொள்ளும் உணர்வு. நம்பிக்கையாக இருக்கும் வரை கடவுளோடு தொடர்புடையது. அதுவே அடுத்த மதத்தின் மீதான அவநம்பிக்கையாகவும், வெறுப்புணர்வாகவும் மாறும் போது, ஆபத்தான சமூக விரோத ஆயுதமாக மாறிவிடுகிறது.
எல்லோருக்குமானது இந்த உலகம் என்ற படைப்பின் நியாயத்தையே மறுதலித்து நிற்கும் வெறியுணர்ச்சியாக உருவெடுக்கிறது.
அதன் விளைவுகள்தான் குண்டுவெடிப்புகளும், உயிர்ப்பலிகளும்.
இப்போது சொல்லுங்கள்.
ஜனநாயகத்துக்கு ஆபத்தானது மதவாதமா? ஊழலா?
இனியாவது இந்தக் கேள்விக்கு மனச்சாட்சிக்கு மாறில்லாமல் நேர்மையான பதிலைச் சொல்வோம். நிச்சயமாக அதற்கான நேரம் வந்துவிட்டது.
மேனா. உலகநாதன்