ஆரம்பிச்சுட்டாரு ஏ.ஆர். ரகுமானும்… தமிழகத்திற்கு வலுவான தலைமை தேவையாம்!

தமிழகத்தில் எல்லோருமே இப்போது அரசியல் பேசத் தொடங்கி விட்டார்கள். அதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் விதிவிலக்கல்ல என்றாகிவிட்டது. ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து பேசிய ரகுமான், தமிழகத்திற்கு வலுவான தலைமை தேவைதான் என்று வேறு சொல்லி  இருக்கிறார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், திரையுலகிற்கு அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடி வருகிறார். இதற்காக சென்னையில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கிறார். ‘நேற்று இன்று நாளை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சி ஜனவரி 12ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது.

இது குறித்து அவர் கூறும்போது, ‘நான் அயல்நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தும் போது, சென்னையில் எப்போது இது போன்று இசை நிகழ்ச்சி நடத்தப் போகிறோம் என்ற எண்ணம் ஏற்படும். இப்போதுதான் அதற்கு நேரம் வந்துள்ளது” என்றார்.

மேலும் ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் பற்றி கூறும்போது, ‘ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி. அவர்களுக்குள் ஏதோ ஆதங்கம் இருக்கிறது. அதனால் தான் அரசியலில் ஈடுபடுகிறார்கள். தமிழ்நாட்டுக்கு வலுவான தலைமை வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். ரஜினிகாந்த் அல்லது வேறு யாராக இருந்தாலும் மக்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகள், இசை, கலைகளை மேம்படுத்த வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் வாழ்க்கை இன்னும் மேம்பட வேண்டும். அதிசயம் நிகழ வேண்டும் என்று நான் உணர்கிறேன்” என்று கூறியுள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.