கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி…

உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வைத் தொடர அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

முஸ்லிம் பிரதிநிதிகள் தரப்பில், கியான்வாபி மசூதியில் ஆய்வு மேற்கொண்டால் அது கட்டமைப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று வைக்கப்பட்ட வாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. நீதியை நிலைநாட்ட அறிவியல் பூர்வ ஆய்வு தேவைப்படுகிறது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்து தொல்லியல் துறை ஆய்வைத் தொடர அனுமதி அளித்துள்ளது.
தனையடுத்து இந்துப் பெண்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மசூதியில் ஆய்வானது தொல்லியல் ஆய்வுத் துறை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அளிக்கப்பட்ட உத்தரவாதங்களின் அடிப்படையில் நடைபெறும்” என்றார்.
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. மசூதி சுவரில் அமைந்துள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதி கோரி கடந்த 2021-ல் 5 இந்து பெண்கள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், கியான்வாபி மசூதியில் களஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதன்படி மசூதியில் ஆய்வு நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் மசூதியின் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று கோரி 4 இந்து பெண்கள் சார்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மாவட்ட நீதிமன்றம் இதற்கு அனுமதி அளித்தாலும் மசூதி தரப்பில் இருந்து உச்ச நீதிமன்றம் மூலம் இடைக்கால தடை பெறப்பட்டது.

இதற்கிடையில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல் முறையீட்டு மனுவில் கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கூறும்போது, “அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன். தொல்லியல் துறை ஆய்வுக்குப் பின்னர் உண்மை தெரியவரும். அதன் மூலம் கியான்வாபி பிரச்சினைக்கு தீர்வு கிட்டும்” என்றார்.

முஸ்லிம் தலைவர் காலீத் ரஷீத் ஃபிராங்கி மஹாளி கூறுகையில், தங்களுக்கு உச்ச நீதிமன்றத்தை நாடும் வாய்ப்பு உள்ளது என்றார்.