அவதார் 2 : எழுத்தாளர் சுந்தரபுத்தனின் விலாசமான பார்வை

ஜேம்ஸ் கேமரூனின் பாசமலர்

சென்னை நெக்சஸ் விஜயா மால் பலாசோ சினிமாவில் அவதார் 2 பார்த்தேன். அடடா… மனித கற்பனைக்கு எட்டாத காட்சிகளின் பேரழகில் மயங்கிப்போனேன்.
இந்திய சினிமாவில் பார்த்து ரசித்த கதைதான். ஹீரோ குடும்பத்தை அழிக்க நினைக்கும் வில்லன் என்று ஒரு வரியில் எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால், ஜேம்ஸ் கேமரூனின் இந்த திரைப்படம் ஓர் அபூர்வம், ஆச்சரியம், அழகின் சிரிப்பு.
கண்ணின் கருவிழியில் அசையும் கதையின் களமும், உச்சகட்ட சினிமா டெக்னாலஜியும் நாம் நினைத்துப் பார்க்கமுடியாத செலுலாய்டு அதிசயம். கண்ணில் அலையடிக்கிறது பெருங்கடல். பண்டோராவில் மலைகளுக்கு இடையில் பூத்து நிற்கும் இயற்கை உலகம் பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லை…
ஓமாட்டிக்காயா இனத்தின் பண்டோரா பிரதேசம், பிரமாண்ட தாவரங்கள், குடை விரிக்கும் இலை தழைகள், வினோதமான பூச்செடிகள், பூச்சிகள், கடலுக்குள் பூக்கும் பட்டாம்பூச்சிகள், பறக்கும் விலங்குகள், ரோபோட்டுகள் என புதுமையின் வண்ணங்களை திரையில் வாரியிறைத்திருக்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.
ஹாலிவுட் படத்தில் கதாபாத்திரங்கள் உள்ளூர்த் தமிழில் பேசுவதைக் கேட்பது சுகமான அனுபவம். தந்தையைப் பற்றிய வார்த்தைகள், சாதாரண உரையாடல்களில் எளிய தமிழ் பேச்சுவழக்குகள் என களைகட்டுகிறது அவதார் 2. தமிழ் வசனங்களை சமகால ரசனையுடன் மிக கவனமாக எழுதியுள்ளார் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி.
பேய்க்கு வாக்கப்பட்டா புளிய மரம் ஏறித்தான் ஆகணும் என்று ஒரு கதாபாத்திரம் பேசுகிறது. சில மொழி மாற்றுப் படங்களின் வசனங்களில் எதார்த்தம் தொலைந்திருக்கும். இந்தப் படத்தில் வெகு சுவாரசியமான பேச்சு மொழி.
ஓமாட்டிக்காயா தலைவன் பெருங்கோபமும் பேரன்பும் கொண்டவன். அன்பு மனைவி, ஆசை மகள், மகன்கள் என அன்பு மழை பொழிகிறான். அவதார் 2 வை ஹாலிவுட் பாசமலர் என்றுகூட சொல்லலாம். கடலாக இருந்தாலும் காடாக இருந்தாலும் குடும்பப் பாசம்தான் பிரதானமாக நிறைந்திருக்கிறது.
நீங்கள் எந்த ஊடகம் வழியாகவும் இந்தப் படத்தைப் பார்க்கலாம். உங்களால் தியேட்டரில் பார்க்கும் அற்புத அனுபவத்தைப் பெறவே முடியாது.

நன்றி
சுந்தரபுத்தன் முகநுால் பதிவிலிருந்து