ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதி வழங்க தடை இல்லை : சென்னை உயர்நீதிமன்றம்..

ஏழைத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களை அடையாளம் காணும் வரை திட்டத்தை அமல்படுத்த தடை விதிக்க கோரிய வழக்கில்

முதலில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் எனக் கூறப்பட்டதாகவும்,

தற்போது தேர்தல் ஆதாயத்திற்காக ஏழைகளாக கருதப்படுபர்களின் விவரங்களையும் சேகரிக்க படிவங்கள் வழங்கப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டு வரும் நிலையில், யார் யாருக்கு உதவித்தொகை வழங்குவது என பின்னர் முடிவு செய்யப்படும் என்றும்,

பயனாளர்களை தேர்வு செய்ய 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர்.

2,000 ரூபாய் உதவித்தொகை வழங்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாகத் தெரிவித்த நீதிபதிகள், பயனாளிகளை கண்டறிய சரியான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதால் இதில் தலையிட முடியாது என்றனர்.

அப்போது ஏற்கனவே 7 பேர் தேர்வுக்குழு என அரசாணை வெளியிடப்பட்டதாகவும், தற்போது அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசாணையில் 9 பேர் குழு என உள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் மூலம் பயனாளிகளின் வரம்பு அதிகரிப்பதாகவும், எனவே திருத்தப்பட்ட அரசாணையை தாக்கல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி புதிய மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்குமாறும் கோரப்பட்டது. இதையடுத்து புதிய மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதியளித்தனர்.