முக்கிய செய்திகள்

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்

குழந்தைகள் வளர்ப்பு பற்றிய தொடர்

என். விஜயா, குழந்தைகள் நல ஆலோசகர்

வாழ்க்கையில்
ஒரு பயணம். நாம் அதில் ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து வாழத் தொடங்குகிறோம். நாம் எல்லோருக்குமே
வாய்ப்புகள் கிடைக்கின்றன. நேர்மறையாகப் பயன்படுத்துகிறவர்கள் அதிக பலன்களைப் பெறுகிறார்கள்.
இளம் பிராயத்தில் இலக்கை நிர்ணயிக்காமல் பயணம் செய்பவர்கள் அடையவேண்டிய எல்லையை அடையாமல்
தேங்கிவிடுவார்கள். உங்கள் பாதையைத் தேர்ந்தெடுக்கும் நிலையி்ல இருக்கிறீர்கள்.

புதுமையான
பல படிப்புகள் அறிமுகமாகியுள்ளன. பல புதிய வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளன. எதைப் படித்தாலும்
அதில் சிலர் மட்டுமே வெளிச்சத்தை நோக்கி நகர்கிறார்கள். சில மார்க்கெட்டிங் உத்திகளும்
வாழ்க்கையில் தேவைப்படுகின்றன. எவ்வளவுதான் பணம் இருந்தாலும், மெரிட் வழியாக கிடைக்கிற
வாய்ப்புகளுக்கு இணை ஏதுமில்லை. அதன் வழியாக வரும் வளர்ச்சியே தனிதான்.

எம்பிஏ
படிக்கலாம். அப்பாவின் பணத்தில் படிக்கலாம். அதே படிப்பை மதிப்பெண்களின் அடிப்படையில்
சேர்ந்து படிக்கும்போது, அதன் முடிவுகள் எதிர்காலத்தையே தீர்மானிக்கும். இளம் தலைமுறை
படிப்பதையே பெரும் தியாகம் என்று நினைத்துக்கொள்கிறது. படிப்பு, திறன் மேம்பாடு, பயிற்சி
பிறகு வேலை என்று நடப்புலகம் மாறியுள்ளதை நினைவில் கொள்ளுங்கள்.

கல்லூரி
மாணவர்களுக்கு நேரமும் சக்தியும் இழந்துவிட்டால் திரும்பக் கிடைக்காது. என்ன படிக்கவேண்டும்
என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள். நண்பர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதெல்லாம்
பிரச்சினையில்லை. சமூக வலைதளங்கள், பொழுதுபோக்குகளில் நேரத்தை இழப்பதை அறிவதில்லை.
நேரத்தின் அருமையை உணரும்போது வாழ்க்கை நம்மை விட்டு கடந்துபோய்விடும்.

ஓர் ஆண்டு
என்பது இளமையில் சாதாரணமாகத் தெரியும். முதுமையில் ஒரு நாள்கூட முக்கியமானது என்பதை
உணர்வோம். சிறுபிராயத்தில் பிறந்தநாள் என்பது  கொண்டாட்டமான எதிர்பார்ப்பு. அதுவே பின்னாளில் ஏன்
வயதாகிறது என்ற கவலையாக மாறிவிடக்கூடும். காலம் முக்கியமானது. தங்கத்தைப் போல நினைத்து
செலவழிக்கவேண்டும்.

படிக்கும்போது
குரூப் ஸ்டடி சிறந்ததாக இருக்கலாம். எல்லா வகையான படிப்புகளுக்கும் அப்படி படிக்கமுடியாது.
சிலருக்கு தனிமையில் படிப்பது பிடிக்கும். நீங்கள் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்காவிட்டால்,
சோர்ந்துபோய்விடுகிறார்கள். ஒரு விஷயம் முக்கியம். உங்கள் விருப்பமான பாடப்பிரிவுடன்
தொடர்புடைய வேறு பிரிவுகளையும் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் ஒன்று கிடைக்காவிட்டாலும்
ஏமாற்றம் இருக்காது. எளிமையாக வாழ்க்கைச் சம்பவங்களைப் பாவிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.
எல்லாவற்றுக்கும் சீரியஷாக யோசித்தால் ஏதும் நடக்காது.

பத்தாம்
வகுப்புப் படிக்கும்போது சிலருக்கு இதுதான் படிக்கவேண்டும் என்ற தெளிவு கிடைக்கும்.
சிலருக்கு பிறப்பிலேயே சில தனித்த திறமைகள் தெரியவரும். அதில் ஈடுபாடு காட்டுவார்கள்.
தனக்கு என்ன வரும் என்ற புரிதல் கட்டாயம் தேவையானது. நண்பர்கள் படிப்பதால் நானும் அதையே
படிக்கிறேன் என்ற நிலைப்பாடு தவறானதாக போய்விடும். உங்கள் விருப்பம்தான் முக்கியம்.
ஒரு நண்பருக்கு நன்றாக படிக்கவருகிற பாடங்கள், மற்றவர்களுக்கு எட்டிக்காயாக கசக்கத்
தொடங்கிவிடும்.

உங்கள்
எதிர்காலத்திற்கு நீங்கள் முதல் அதிபர். அடுத்த நிலையில்தான் பெற்றோர். நண்பர்கள் மூன்றாவதாக
வருவார்கள். உங்களுக்குள் ஒரு சுய அலசல் வேண்டும். எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது
என்ற தெளிவு வேண்டும்.

தொடரும்

https://twitter.com/