விவசாயிகளின் அனைத்துப் பிரச்சினைகளும் திமுக ஆட்சிக்கு வந்ததும் தீரும்: கனிமொழி எம்.பி உறுதி..

கனிமொழி எம்.பி

தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி மலரும். அப்போது விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளும் தீரும் என தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி உறுதியளித்தார்.

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுடன் கனிமொழி எம்பி இன்று கலந்துரையாடினார்.

ஸ்ரீவைகுண்டம் அணை தென்கால் பாசன விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் கல்லாம்பாறை பூலுடையார் சாஸ்தா கோவில் வளாகத்திலும், குரும்பூர் பகுதி விவசாயிகளின் கலந்துரையாடல் கூட்டம் குரும்பூர் ஞானம் மஹாலிலும் நடைபெற்றது. இதில், திமுக மகளிரணி செயலாளரான கனிமொழி கருணாநிதி எம்பி கலந்துகொண்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து கடம்பாகுளத்துக்கு தடையின்றி தண்ணீர் வர ஏற்பாடு செய்ய வேண்டும். கடம்பாகுளத்தை தூர்வார வேண்டும். கடம்பாகுளம் உபரி நீரால் பயன்பெறும் 12 குளங்கள் மற்றும் 10 மடைகளை சரிசெய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதிலளித்த கனிமொழி எம்,பி., தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி மலரும். அப்போது விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளும் தீரும். மேலும், எனது மக்களவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து விவசாயிகளுக்கு தேவையான பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
தொடர்ந்து வடகால் பாசன பகுதி விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் மாலையில் நடைபெறுகிறது.

முன்னதாக ஸ்ரீவைகுண்டம் அணைக்கு நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார்.

அப்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, ஆழ்வார்திருநகரி ஒன்றியக் குழு தலைவர் ஜனகர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பிரம்மசக்தி, திமுக மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர், ஏரல் வட்டாட்சியர் இசக்கிராஜ், திருச்செந்தூர் வட்டாட்சியர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புலட்சுமி, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தோஷ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரகுநாதன், வேளாண்துறை செயற்பொறியாளர் சாகிர் உசேன், வேளாண்துறை உதவி இயக்குநர் ஊமத்துரை மற்றும் திமுகவினர், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.