புத்தக அறிமுகம்: ‘கந்தக நதி’யைக் கடந்து வந்த ‘ஜனநாயகன்’!

கலைஞரைப் பொறுத்தவரை நிறைய எழுதியவர் மட்டுமல்ல; எழுதப்பட்டவரும் கூட. ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்போதைய தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குறித்து அந்த அளவு எழுதப்படவில்லை.

50 ஆண்டுகால நீண்ட நெடிய அரசியல் பணயத்திற்குப் பின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் அவரது அரசியல் வாழ்வு அதிகம் பேசப்படாதது தமிழ்வெளியில் தன்னிச்சையாக நடந்து விட்ட ஒன்றல்ல. எதிர்மறை அனுபவங்களையே அதிகம் சந்தித்த மு.க.ஸ்டாலினின் வரலாறு குறித்த மௌனம், ஆதிக்க வர்க்கத்தின் அழுத்தமான வன்மத்தின் நுட்பமான செயல்திட்டத்தின் ஒரு பகுதியே!

திட்டமிடப்பட்ட புறக்கணிப்புகளை, மிதித்து மிதித்து மேலேறித்தான், தற்போது காலத்தால் தகவமைக்கப்பட்ட தகைசால் தலைவராக முகிழ்த்து நிற்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

அதிகம் பேசப்படாத அனாயசமான அவரது அரசியல் வாழ்வைப் பற்றி இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாகத்தான், திருவாரூரைச் சேர்ந்த ஜெ. ஜெயகாந்தன், ‘ஜன நாயகன்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்தையும் பெற்றுள்ளார்.   

பத்திரிகை ஆசிரியர் (பேசும் புதிய சக்தி), எழுத்தாளர், பதிப்பாளர்… இப்படிப் பன்முக ஆளுமை கொண்ட ஜெ. ஜெயகாந்தன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடும், பிடிப்பும் கொண்டவர் என்பது அவர் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தில் இருந்தே தெரிகிறது.

மு.க.ஸ்டாலின் தொடர்பான தனித்துவம் மிக்க படங்களுடன், அவரைப் பற்றிய துல்லியமான வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய ஆவணமாக வெளிவந்திருக்கிறது ‘ஜனநாயகன்’.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எனப் போற்றப்படும் இந்தியத் துணைக் கண்டம், அதற்கான அடித்தளங்களை ஒவ்வொன்றாக இழந்து வரும் காலத்தில் நாம் வாழ்கிறோம். அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் ஜனநாயக் கட்டமைப்புகள் மட்டுமின்றி, ஆட்சி நிர்வாக இயந்திரமும் தன்னிலை இழந்து தவிக்கும் நிலையில் தேங்கி விட்டது. தமிழ்நாட்டின் தனித்த அடையாளமான சமூகநீதி சார்ந்த முன்னெடுப்புகளும், மெல்ல மெல்லத் தேங்கித் தேயும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. போதாத குறைக்கு கொரோனா எனும் கொடுந்துயரும் சேர்ந்து, தமிழ்நாடும், அதன் மக்களும் இனம் தெரியாத அச்சத்தின் பிடியில் சிக்கியிருந்த நேரத்தில் தான், மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனார். எனினும் முதலமைச்சர் என்ற பதவியை காலம் அவருக்கு மலர்க்கிரீடமாக சூட்டி விடவில்லை. முள்கிரீடமாகவே வழங்கியது.

மாநிலத்தின் நிதியாதாரம் அதலபாதாளத்தில் சரிந்து கிடந்தது. கொரோனா தொற்றுப் பரவலும், உயிரிழப்பும் உச்சத்தில் இருந்தது. ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு வாயளவில்கூட இல்லை. என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்? என்ற கேள்வி, பொதுமக்களை மட்டுமின்றி, சொந்தக் கட்சிக் காரர்களையும் கூட அச்சத்திலும், குழப்பத்திலும் ஆழ்த்தி இருந்தது. ஆனால், முதலமைச்சராகப் பதவியேற்றதும் அவர் எடுத்த நடவடிக்கைகளும், அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்ட வேகமும் எதிரிகளையே வாயடைக்கச் செய்து விட்டது.

14 வயதில் ‘கோபாலபுரம் இளைஞர் தி.மு.க’வைத் தொடங்கியதில் இருந்து, 2021 மே 7 ஆம் தேதி அவர் முதலமைச்சராகப் பதவியேற்றது வரையிலான, முக்கிய நிகழ்வுகளை, வெறும் தகவல்களாக மட்டுமில்லாமல், அவற்றின் பின்புல அடர்த்தியை உணர்த்தும் அழுத்தமான கருத்துப் பொதிவுடன் விவரித்திருக்கிறார் நூலின் ஆசிரியர் ஜெ. ஜெயகாந்தன். கலைஞர் ‘நெருப்பாற்றில் நீந்தி வந்தவர்’ என்றால், இவர் கடந்து வந்திருப்பது ‘கந்தக நதி’ என்கிறார் ஆசிரியர். கலைஞர் காலத்தில் களத்தில் நின்றிருந்த அரசியல் எதிரிகளுக்கும், ஸ்டாலின் காலத்தில் அவருக்கு எதிரே நின்றிருக்கும் அரசியல் எதிரிகளுக்கும் இடையே நிறைய வேறுபாடு இருக்கிறது. களமும், காலமும் நிறைய மாறி இருக்கிறது. மெய்யான உலகின் எதிரிகளை விட, மெய்நிகர் உலகின் (டிஜிடல்) எதிரிகள் கீழ்மையும், வன்மமும் பல மடங்கு அதிகம் கொண்டவர்கள். அதிநவீன யுகத்தின் அத்தகைய சிக்கலான எதிரிகளை எதிர்கொண்டு முறியடித்ததில்தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் தலைமைத்துவம் முழுமையும், முதிர்ச்சியும் பெற்றுத் தனித்தெழுந்து நிற்கிறது!

கந்தக நதியைக் கடந்து வந்திருக்கும் ஒரு தற்காலத் தலைவனின் வரலாற்றை, தக்க நேரத்தில் வெளிக் கொணர்ந்திருக்கிறார் ஜெ. ஜெயகாந்தன்.

தரமான தாளில் நேர்த்தியான வடிவமைப்புடன் வெளிவந்திருக்கும் ‘ஜனநாயகன்’ என்ற இந்தப் புத்தகம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் பயணம் குறித்த முழுமையான வரலாற்றை அறிய விரும்பும் ஒவ்வொரு திமுக உடன்பிறப்புக்கும், திராவிட இயக்கத்தின் பால் ஈடுபாடு கொண்ட அனைத்து இளைஞர்களுக்கும் மிகச்சிறந்த ஆவணமாகத் திகழும் என்பதில் அய்யமில்லை!

விலை: ரூ. 150, வெளியீடு: பேசும் புதிய சக்தி, 29H, A.N.R. காம்ப்ளக்ஸ், தெற்குவீதி, திருவாரூர்.

கைபேசித் தொடர்புக்கு: 9489773671, மின்னஞ்சல்: pudiyasakthitvr@gmail.com