திமுகவுக்கு தினகரன்கள் பொருட்டா?: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)

ஆர்கே நகர் இடைத்தேர்தலில்  ஆளும் கட்சி தோற்றுப் போனதற்காக பொதுவெளியைச் சார்ந்த யாரும் கவலை கொண்டதாக தெரியவில்ல.. திமுகவின் தோல்வி தான் அவர்களை அதிர்ச்சிக்கும்,கவலைக்கும் உள்ளாக்கி இருக்கிறது. காரணம், தமிழகத்தைப் பொறுத்தவரை, சமூகநீதி சார்ந்த குறைந்தபட்சக் கொள்கை ஆதாரங்களுடன், தேர்தல் அரசியல் களத்தில்  நிற்கும் ஒரே ஒரு வெகுசன இயக்கம் திமுக மட்டும்தான். ஜெயலலிதா இல்லாத நிலையிலேனும் 100  ஆண்டு சமூக நீதிப்பாரம்பரியத்தை உடைய அக்கட்சி வெல்ல வேண்டும் என்பது கருத்துப் பிறழ்வுக்கு ஆட்படாத பலரது கவலை. ஆனால் திமுக தோற்றது மட்டுமல்ல, எம்ஜிஆர் இருந்த போது கூட கலையாத அதன் வாக்கு வங்கி தற்போது கலைந்துவிட்டது என விமர்சிக்கப்படும் அளவுக்கு மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு, டெபாசிட்டையும் இழந்துள்ளது.

திமுக என்ன நினைக்கிறது?

“ஆர்கே நகரில் தோற்றது திமுக அல்ல, தேர்தல் ஆணையம்” என்ற பதிலின்  மூலம் அக்கட்சியும், அதன் செயல் தலைவர் ஸ்டாலினும், இந்தத் தோல்வியைக் கடந்து செல்ல முயற்சிப்பது தெரிகிறது. அது சரியானதுதானா? என்பது முதல் கேள்வி.

டிடிவி தினகரனின் வெற்றி முழுமையாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததால் கிடைத்தது என்பது, பரவலாக பேடப்படுகின்ற விமர்சனமாக உள்ளது. இதுவும் சரியான பார்வைதானா? என்பது இரண்டாவது கேள்வி.

தேர்தல் ஆணையம் என்பது ஜனநாயகத்தின் ஒரு பல்லில்லாத  அமைப்பு என்பது ஆராய்ச்சி செய்து தெரிந்து கொள்ள வேண்டிய அந்தரங்க உண்மை அல்ல. அதனால் தேர்தல் தோல்விக்கு அவர்களை மட்டுமே குற்றம் கூறுவது, திமுக தனது இயலாமையை வெளிப்படுத்தக் கூடியதாகவே அமையும்.

இரண்டாவது தினகரன் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிவிட்டார்  என்பது அனைவருக்குமே தெரிந்த ரகசியம் தான். ஆனால், அதே அளவு இல்லாவிட்டாலும், அதற்கு சற்றேறக்குறைய ஆளும் தரப்பும் பணம் கொடுத்திருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது. அத்துடன், ஆர்கே நகர் வெற்றி பணத்தால் மட்டுமே நிகழ்ந்தது எனில், அதற்குப் பொறுப்பு யார்? திமுகவும் தான். திமுகவுக்கும் மற்ற கட்சிகளுக்கும் உள்ள வேறுபாடு அதன் கருத்து வலிமையும், கட்டமைப்பு உறுதியும்தான். இவை இரண்டுமே தற்போது கேள்விக்குள்ளாகி இருக்கிறது. கருத்து வலிமை கேள்விக்குள்ளானதால் தான் சிறுபான்மையினரின் வாக்கு வங்கி சிதறி இருக்கிறது. கட்டமைப்பு உறுதி பலவீனப்பட்டதால் தான் கட்சியைச் சேர்ந்தவர்களே வேலை பார்க்கவில்லை என்று தெரிகிறது.

இந்தக் காலத்துக்கு அவையெல்லாம் சரியாக வராது எனக் கூறி இதுவரை வகுத்த வியூகங்கள் உதவவில்லை என்ற உண்மையை இனியேனும் திமுக உணர வேண்டும். அதிமுகவை பலவீனப்படுத்த தினகரனை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்ற என்ற வியூகத்தை திமுக வகுத்தது உண்மையென்றால், அதில் இருந்தே திமுகவையும் சேர்த்துப் பலவீனப்படுத்தும் புதிய வியூகத்தை தினகரன் வகுத்து, வெற்றியும் பெற்றிருக்கிறார் எனக் கூற வேண்டி இருக்கிறது. மதவாதத்தாலும், சுரண்டலாலும் நாடே திமிலோகப்பட்டுக் கொண்டிருக்கும் தற்போதைய நிலையில், நேரடிச் சமரில் இறங்காமல், இப்படி ஒரு சுற்றி வளைக்கும் வியூகத்தை திமுக நம்பி இருக்குமே ஆனால், அதற்காக வருத்தப்படுவதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

என்றாலும், ஆர்கே நகர் தோல்விக்கு திமுகவை மட்டுமே முழுமையாக குற்றம்சாட்டுவதில், வழக்கமான திமுக – கலைஞர் எதிர்ப்பாளர்களின் சமூக உளவியல் சதியை மறைப்பதற்கும், மறுப்பதற்குமான அபாயமும் இருக்கிறது.

நாற்பது ஆண்டுகளாக திமுகவுக்கும், கலைஞருக்கும் எதிரான அரசியலையும், உளவியலையும் கட்டமைத்து வந்த கூட்டத்திற்கு இந்த தோல்வி மகிழ்ச்சி அளித்ததை தொலைக்காட்சி நேரலையில் பங்கேற்றிருந்த அந்தக் கூட்டத்தின் பிரதிநிதிகள் சிலரின் வெளிப்பாட்டில் இருந்தே உணரமுடிந்தது. பிரபலமான மூத்த பத்திரிகையாளர் ஒருவர், “ தினகரனிடம் ஒரு வசீகரம் தெரிகிறது” என்று நேரலையிலேயே சொன்னதைப் பார்க்க முடிந்தது. நாற்பது ஆண்டுகாலமாக கலைஞருக்கு எதிராக வினைபுரிந்து வந்த விஷமத்தனமான உளவியலின் நீட்சியாகவே அதனைப் புரிந்து கொள்ள முடிந்தது. அடிப்படைக் கொள்கையளவில், சாதிக்கும், மதவெறிக்கும் நேரெதிரான கோட்பாட்டைக் கொண்டது திமுக. அதன் பொதுவெளிக் குறியீடாக முக்கால் நூற்றாண்டாக திகழ்ந்து கொண்டிருப்பவர் கலைஞர். எனவேதான், ராஜாஜிக்குப் பிறகு அந்தக் கூட்டம் எம்ஜிஆரைக் கண்டுபிடித்து கூர்தீட்டியது. அவருக்குப் பின்னர் ஜெயலலிதாவைப் பட்டை தீட்டி ஜொலிக்க வைத்தது. இப்போது அவர்களுக்கு, தினகரன் கிடைத்திருப்பதாக தெரிகிறது. இந்த உண்மையின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாமல் திமுக தனது எதிர்கால வெற்றிக்கான பாதையை அமைக்க முடியாது. 

பிரதமர் மோடி அண்மையில் வந்து கலைஞரைச் சந்தித்தது திமுகவின் மீதான சந்தேகத்தை எழுப்புவதற்கு, அதன் வழிவழி எதிரிகளுக்கு வசதியான துருப்புச் சீட்டாக கிடைத்து விட்டது. ஏதோ இவர்களெல்லாம் மதவாதத்தையும், பாஜகவையும் ஒழிப்பதற்காக பிறந்தவர்கள் போலவும், திமுக அதனை விட்டுக்கொடுத்து விட்டதைப் போலவும் வேதாந்த விளக்கங்கள் கொடுக்கத் தொடங்கி விட்டனர். 2 ஜி வழக்கின் தொடக்கம் எப்படி திமுகவின் தோல்விக்கு காரணமாக அமைந்ததோ, அதைப் போலவே அதன் வெற்றியையும் திமுகவுக்கு எதிராக திருப்பும் தந்திரத்தை, திமுக – கலைஞர் எதிர்ப்பாளர்கள் மிகக் கச்சிதமாகவே அரங்கேற்றி முடித்து விட்டனர். ஆர்கே நகர் தோல்வி்ககாக திமுகவையும், அதன் செயல் தலைவர் ஸ்டாலினையும் சமூக வலைத்தளங்களில் திட்டித் தீர்க்கும் இன்றைய தலைமுறை, அரைநூற்றாண்டுக்கும் மேலாக, திமுகவுக்கும் – கலைஞருக்கும் எதிராக சமூக உளவியலின் அடிநெருப்பாக கனன்று கொண்டிருக்கும் இத்தகைய ஆதிக்க நெருப்பை இனம் காணப்பழக வேண்டும். மேலோட்டமான கோபமும், சோர்வும் அடுத்த கட்டப் பயணத்திற்கு உதவாதவை.

ஆர்கே நகர் தேர்தலை வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் மலிவான தந்திரத்திற்கு எதிராக, ஜனநாயக முறையில் சந்திக்க திமுகவும், அதன் செயல் தலைவர் ஸ்டாலினும் எடுத்த முடிவு சரியானது. மேன்மையானது. முதலில் அதனை வரவேற்கக் கற்றுக் கொள்ள வேண்டும். பாழாகிக் கொண்டிருக்கும் தேர்தல் அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஓர் பெரும் முயற்சி.

இதற்கு அடுத்த படியாக, திமுகவுக்கு இத்தனை எதிரிகள் ஏன் என்பதை இன்றைய தலைமுறையினருக்கு புரிய வைக்க முயல வேண்டும். இதைவிட மோசமான ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளவர்கள் மீதெல்லாம் வராத கோபமும், வன்மமும் திமுக மீது  மட்டும் ஏன் வருகிறது என்பதை இளைஞர்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கும் புரிய வைக்க முயல வேண்டும். வறுமையிலும், அறியாமையிலும் சிக்கித் தவிக்கும் அடித்தட்டு மக்களை அதில் இருந்து அதிவிரைவாக மீட்பதற்கான  வேலைத்திட்டங்களை உருவாக்க வேண்டும். ஆதிக்க சக்திகளின் வாக்கு வங்கிகளாக அவ்வப்போது கைமாறுவது இந்தச் சமூகம் தான். அதில் அவர்கள் மீது குற்றமில்லை. அவர்களை அறியாதவர்களாகவும், வறியவர்களாகவும் இத்தனை ஆண்டுகாலமாக வைத்திருப்பதுதான் குற்றம். அவர்களை அ்ந்த நிலையில் இருந்து மீட்பதற்கான திட்டங்களுக்கு மேலும் மெருகூட்டி, ஆட்சிக்கு வந்தால் அவற்றை விரைவாக செயல்படுத்துவோம் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஊட்ட வேண்டும். இவையெல்லாம், தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடு சென்று திமுகவின் தொடக்க காலங்களில் செய்யப்பட்டதைப் போல திட்டமிட்ட பரப்புரையை மேற்கொண்டால் தான் சாதிக்க முடியும். சமூக வலைத்தளங்களையும், ஊடகங்களையும் மட்டுமே நம்பிப் பயனில்லை. மக்களிடம் செல்லுங்கள். அவர்கள் கற்றுத்தருவார்கள் வெற்றிக்கான ஆயிரம் வழிகளை உங்களுக்கு. “திமுக என்பது ஜனசமூக அரசியல் பெருக்கில் மேலோட்டமாக மிதக்கும் தக்கையல்ல. அடிஆழம் வரை ஊடுருவிச் செல்லும் நீர்மூழ்கிக் கப்பல்” என்ற அதன் அடையாளத்தை மீள்கட்டமைப்புச் செய்ய வேண்டிய தருணம் இது.                              

எம்ஜிஆரையே எதிர்த்து நின்ற திமுகவுக்கு தினகரன்கள் ஒரு பொருட்டல்ல. ஆனால், அதற்கான தீவிரமும், அர்ப்பணிப்பும் கட்சியினரிடையே தேவை. மிட்டா, மிராசுகளுக்கு எதிரான கட்சி என்ற அடையாளத்தோடு தோன்றி வளர்ந்து மக்களின் மனதில் இடம்பிடித்த திமுக, இப்போது மிட்டா மிராசுகளுக்கான கட்சியாக மாறிவிட்டதோ என்ற சந்தேகப்படும் அளவுக்கு அதன் தோற்றம் இருப்பதை மறுப்பதற்கில்லை. திமுக என்றைக்குமே எளிய மக்களுக்கான இயக்கம் என்பதை நிறுவும் வகையில், அதன் இரண்டாம் கட்டத் தலைவர்களும் தங்களது அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்.

திமுக தான் பயணித்த சுவடுகளைத் திரும்பிப் பார்த்து, அதில் இருந்து எதிர்காலத்திற்கான புதிய பாதையை வகுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்கான திட்பமும், நுட்பமும் திமுகவுக்கு உண்டு என்பதால், தனக்கே உரிய கொள்கை  சார் கம்பீரத்துடன் அதன் பயணம் தொடரட்டும்.

Is Dinakaran compete to DMK?

.