மதுரை – நத்தம் சாலையில் பிரமாண்டமாக அமையும் கலைஞர் நூலகம் …

மதுரை நத்தம் சாலையில் பிரமாண்டமாக அமையுள்ள கலைஞர் நூலகம்

மதுரை-நத்தம் ரோட்டில் ரூ.70 கோடி செலவில் பிரமாண்டமாக அமையுள்ளது கலைஞர் நூலகம்.மதுரையில் சென்னையில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நுாலகம் அமைக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மதுரையின் அனைத்து பகுதி மக்களும் வந்து செல்ல வசதியான இடத்தில் நூலகம் அமைய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரும்பினார்.
தி.மு.க. அரசு பதவியேற்ற முதல் நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக மதுரையில் ரூ.70 கோடி செலவில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதற்கான கோப்புகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இதைத் தொடர்ந்து மதுரையில் எந்த பகுதியில் கலைஞர் நூலகம் அமைக்கலாம்? என்பதற்காக இடம் தேர்வு நடைபெற்றது.

இதற்காக மதுரை மாட்டுத்தாவணி, உலக தமிழ் சங்க வளாகம், தமுக்கம், பழங்காநத்தம், சிம்மக்கல், ஒத்தக்கடை பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டன.

சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் ஏழு தளங்களுடன் நவீன வசதிகள் கொண்ட நூலகம் என்பதால் மதுரையின் அனைத்து பகுதி மக்களும் வந்து செல்ல வசதியான இடத்தில் இந்த நூலகம் அமைய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரும்பினார்.
இதற்கான இடத்தை தேர்வு செய்ய பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மற்றும் அதிகாரிகள் மதுரை வந்து தேர்வு செய்யப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.

ஆனால் அந்த இடங்களில் நூலகம் அமைக்க போதுமான வசதிகள் இல்லை என்று நிராகரிக்கப்பட்டது. மீண்டும் சில இடங்கள் பரிசீலிக்கப்பட்டன.

இந்த நிலையில் நேற்று மதுரையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு பங்கேற்று 5 மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கூட்டம் முடிந்ததும் மதுரை – நத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த இடத்தில் கலைஞர் நூலகம் அமையும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

எனவே மதுரை – நத்தம் சாலையில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் இடத்தில் கலைஞர் நூலகம் ரூ 70 கோடி செலவில் அமைக்கப்படுவது உறுதியாகியுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகளை தீவிரப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கலைஞர் நூலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் முதல் வாரம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலைஞர் நூலகத்திற்கான அடிக்கல்லை நாட்டுகிறார். சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் விழாவை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கான அதிகாரப்பூர்வ தேதி ஓரிரு நாளில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

மதுரையில் அமைய உள்ள கலைஞர் நூலகத்தில் மாணவ-மாணவிகள் போட்டித் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள தேவையான புத்தகங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் படிக்க தேவையான புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்கள் வேலை வாய்ப்பு, போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் என்று லட்சக்கணக்கான புத்தகங்களுடன், நவீன வசதிகளுடன் இந்த நூலகம் அமைக்கப்படுகிறது.

எனவே கலைஞர் நூலகம் மதுரையின் புகழுக்கு மேலும் ஒரு மணிமகுடமாக திகழும் என்பதில் ஐயமில்லை.