மெஹபூபா முப்தி 14 மாதத் தடுப்புக் காவலுக்குப் பின்னர் விடுதலை : மு.க.ஸ்டாலின் வரவேற்பு..

மெஹபூபா முப்தி

மெஹபூபா முப்தி 14 மாதத் தடுப்புக் காவலுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டதை அறிந்து பெரிதும் மகிழ்கிறேன் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. எனவே, அசம்பாவிதச் சம்பவங்களை தவிர்ப்பதற்காக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன் ஒரு பகுதியாக, அம்மாநில முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சித் தலைவருமான மெஹபூபா முப்தி, முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சி மூத்த தலைவருமான ஒமர் அப்துல்லா ஆகியோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து பெரும்பாலான தலைவர்கள் ஓராண்டுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த சூழலில் மெஹபூபா முப்தி விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து வந்தார். அவர் மீது பொது பாதுகாப்புச் சட்டமும் பாய்ந்தது. மெஹபூபா முப்தியை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில், 13 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த மெஹபூபா முப்தி நேற்று (அக். 13) விடுதலை செய்யப்பட்டார். இதனை ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாக செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சால் அறிவித்தார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (அக். 14) தன் முகநூல் பக்கத்தில், “மெஹபூபா முப்தி 14 மாதத் தடுப்புக் காவலுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டதை அறிந்து பெரிதும் மகிழ்கிறேன்.

மற்ற அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தக் காலக்கட்டத்தில் தடைப்பட்ட அனைத்து ஜனநாயக நடைமுறைகளும் மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.