‘‘மோடி இல்லாத பாரதம்’’ : எதிர்கட்சிகளுக்கு ராஜ் தாக்கரே அழைப்பு..


‘‘காங்கிரஸ் இல்லாத பாரதம்’’ என்ற கோஷத்தை பாஜக முன் வைத்து வரும் நிலையில், வரும் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் ‘‘மோடி இல்லாத பாரதம்’’ உருவாகும் வகையில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேணடும் என மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே அழைப்பு வி்டுத்துள்ளார்.

வரும் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக அல்லாத அரசு அமைவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன. மாநில கட்சிகளும், பாஜகவுக்கு எதிராக கரம் கோர்த்து செயல்பட்டு வருகின்றன. மகாராஷ்ர மாநிலத்திலும் ஆளும் பாஜக அரசு அரசுக்கு எதிராக அலை உள்ளது. சமீபத்தில் விவசாயிகள் பிரமாண்ட பேரணி நடத்தினர். இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு பாஜக அல்லாத எதிர்கட்சிகள் அனைத்தும் ஆதரவு அளித்தன. இதை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை, மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே சமீபத்தில் சந்தித்து பேசினார்.

இந்நிலையில் மும்பையில் நேற்று நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ராஜ் தாக்கரே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

மத்தியில் ஆளும் பாஜக அரசு, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என அடுத்தடுத்து பொருளாதார பாதிப்புகளை அரங்கேற்றியுள்ளது. பிரதமர் மோடியின் மோசமான திட்டங்களால் நாடு இன்று பெரும் அபாயத்தில் உள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு செல்வதாக பிரதமர் மோடி கூறி வருகிறார்.

ஆனால் எந்த முதலீடும் இதுவரை வரவில்லை. பக்கோடா செய்வதற்கான மாவு வாங்குவதற்கு பிரதமர் மோடி வெளிநாடு செல்கிறாரா? இந்திய வங்கியில் கடன் வாங்கி தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வது தொடர்கிறது. சுத்தமான இந்தியா இயககம் உட்பட அனைத்துமே வெறும் பிரச்சாரமாக மட்டுமே உள்ளது. எந்த ஒரு திட்டமும் மக்களுக்கு பயனளிக்கவில்லை. வரும் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி இல்லாத பாரதம் உருவாகும் வகையில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேணடும்’’

இவ்வாறு அவர் பேசினார்.