”நாட்டின் பிரதமரை வரவேற்பது தமிழக அரசின் கடமை” : கனிமொழி எம்.பி. பேச்சு.

மாநில அரசின் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வரும் பிரதமரை வரவேற்பது தமிழக அரசின் கடமை. மக்களுக்கு எதிரான திட்டங்களை ஒரு போதும் இந்த அரசும், திமுக வும் ஆதரிக்காது என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்திருக்கிறார்.
சென்னை லயோலா கல்லூரி மாற்று ஊடக மையம் மற்றும் இல்லம் தேடி கல்வி பள்ளிக்கல்வி துறை சார்பில் 9 ஆம் ஆண்டு வீதி விருது விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டார். கரானாவால் உயிரிழந்த நாட்டுப்புற கலைஞர்கள் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், “கொரானா காலகட்டத்தில் சிறு தொழில் செய்பவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று அனைவரும் கூறினார்கள், ஆனால் திருவிழா நடக்காமல் மிகவும் பாதிக்கப்பட்டது நமது கலைஞர்கள்தான். இப்படி ஒரு சூழல் மீண்டும் வரும் என்றால் கலைஞர்கள் பாதிக்கப்படாமல் ஒரு கட்டமைப்பை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் வைக்கிறேன். எந்த கலைஞராக இருந்தாலும் மரியாதையாக நடத்தப்பட வேண்டும் என்ற பெயரில் சமூக மாற்றம் வேண்டும். இவ்வளவு இளைஞர்கள் ஒற்றுமையாக இணைந்து இந்த விழாவை நடத்தும்போது நிச்சயம் அந்த சமூகத்தில் மாற்றம் வரும். உங்களோடு திமுக ஆட்சி நிச்சயமாக உறுதுணையாக இருக்கும். இத்தனை இளைஞர்களோடு இணைந்து நானும் பணியாற்ற விரும்புகிறேன், வாய்ப்பு இருந்தால் என்னையும் இணைத்து கொள்ளுங்கள்” என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, “ஒன்பது ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
பல்வேறு கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலைஞர்களுக்கு வழங்கி இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கலைஞர்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு ஒரு பெரிய திருவிழாவாக கொண்டாட நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுக்கப்படும்.
அரசுக்கு மக்களை காக்க வேண்டும் என்ற கடமை உள்ளது. மக்கள் பாதுகாப்பு மிகவும் முக்கியம். அதே நேரத்தில் திருவிழாக்கள் நடைபெறாமல் இருக்கும் பட்சத்தில் கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்க அரசு ஒரு வழிவகை செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.
மேலும், “மாநில அரசின் திட்டங்களை தொடங்க வர இருக்கும் பிரதமரை வரவேற்பது நமது கடமையாகும், அரசியல் கருத்தியல் என்பது வேறு. சென்ற அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எதிராக கொண்டுவந்த சட்டங்கள் எதையும் திமுக என்றும் ஏற்றுக்கொள்ளாது. மக்களுக்கு எதிரான திட்டங்களை அரசாங்கம் ஒருபோதும் ஆதரிக்காது” என தெரிவித்தார்.