உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை ஆலோசனை..

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை ஆலோசனை நடைபெற உள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெறவிருக்கின்றது.

இதில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். அப்போது, வாக்காளர் பட்டியலை விரைவாக சரி செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது.
இதேபோல் மாநகராட்சி, நகராட்சி, மற்றும் விடுபட்ட சில பேரூராட்சிகளில் தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் சில இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தம், மகளிருக்கு இடஒதுக்கீடு போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதால், அவற்றைக் களைந்து இவ்வாண்டு இறுதிக்குள் தேர்தல் நடத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்
எனத் தெரிகிறது.