முக்கிய செய்திகள்

ரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா? நொல்ல எண்ணெயா?: கி.கோபிநாத்

 

உலகமயமாக்கலுக்குப் பின்னர் சுமார் 25 ஆண்டுகளாக கனோலா, வெஜிடபிள், சோயா, சேஃப்பிளவர், சன்ஃபிளவர், கார்ன், பாமாயில் என வரிசைகட்டி சந்தைபடுத்தப்படுகிறது ரீஃபைண்டு ஆயில் எனும் இதுபோன்ற சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் தொற்றா நோய்க் கூட்டங்களுக்கு விசாலமாக கதவை திறந்து வைப்பதாக இயற்கை வைத்தியர்கள் கூறுகின்றனர். 25, 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை இரத்த அழுத்தம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிக மிகக் குறைவு. தற்போதைய புள்ளி விவரங்கள் அதிர வைக்கின்றன. இந்தியாவில்

கி. கோபிநாத், பத்திரிகையாளர்

உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம் மாரடைப்பு. ஏறக்குறைய ஆண்டுக்கு 17 லட்சம் பேர் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். 2005-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது இது 53 சதவிகிதம் அதிகம். இதற்கு புகை, மது போன்ற லாகிரி வஸ்துகள் முக்கிய காரணமாக இருந்தாலும், ரீஃபைண்டு ஆயிலும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.

முதலிடத்தில் சூரியகாந்தி

ரீஃபைண்டு ஆயிலில் சன்ஃபிளவர் அதாவது சூரியகாந்தி எண்ணெய்தான் பல வணிகப் பெயர்களில் கொடிகட்டிப் பறக்கிறது. இந்தியாவில் ஏறக்குறைய 4 லட்சம் ஹெக்டேர் சூரியகாந்தி சாகுபடி செய்யப்படுகிறது. சூரியகாந்தி விளைச்சலில் உலக அளவில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கர்நாடகாவுக்குத்தான் முதலிடம். ஒரு லிட்டர் சன்ஃபிளவர் ஆயில் தயாரிக்க சுமார் ஒரு கிலோ 300 கிராம் சூரியகாந்தி விதை தேவை. சூரியகாந்தி விதை ஒரு கிலோ 60 ரூபாய். ஆனால் அனைத்து நிறுவனங்களும் ஏற்றத்தாழ்வின்றி எப்போதும் ஒரே விலையில் எவ்வாறு எண்ணெயை சந்தைபடுத்த முடிகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஏனென்றால் சூரியகாந்தி விதையின் விலை நிலையாக இருக்காது.

எண்ணெய் தயாரிக்கப்படும் விதம்

பல்நோக்கு வணிகம் சார்ந்திருக்கும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில் சுத்தமாக உயிர்ச்சத்து இருக்காது. விதையிலிருந்து எண்ணெய் எவ்வாறு எடுக்கப்படுகிறது, சுத்திகரிப்பின் படிநிலைகள் என்னென்ன? என்பதை பார்ப்போம். விதையை களைந்து சுத்தம் செய்து நசுக்கி சூடுகாட்டி வேகவைப்பார்கள். பின்னர் இயந்திரங்கள் மூலம் விதையை மீண்டும் நசுக்கி எண்ணெய் எடுக்கிறார்கள். இதன் மூலம் கிடைக்கும் புண்ணாக்கில், ஹெக்சேன் (குரூடாயிலை சுத்திகரிக்கும்போது வெளியேறும் கழிவு) எனும் ரசாயனத்தை கலந்து ஆவியில் வைத்து எஞ்சியிருக்கும் எண்ணெயை உறிஞ்சிவிடுகிறார்கள். பின்னர் பாஸ்பேட் கலந்து, எண்ணெய் தனியாக, மற்ற பொருட்கள் தனியாக பிரிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பமாகின்றன. தண்ணீருடன் சில ரசாயனங்கள் கலந்து எண்ணெயில் உள்ள பசைத்தன்மை நீக்கப்படுகிறது. அப்போது கிடைக்கும் கொழுப்பு, சோப்பு தயாரிக்க அனுப்பப்படுகிறது. இரண்டாம் கட்டமாக, எண்ணெயுடன் காஸ்டிக் சோடா அல்லது சுண்ணாம்பு மூலம் பாஸ்பேட் பசை, இயற்கை நிறமிகள், மெழுகுகள் நீக்கப்படுகின்றன. இதனால் எண்ணெயின் நிறம் மாறி பிசுபிசுப்புத் தன்மை குறைந்துவிடும். மூன்றாவதாக, எண்ணெயை களிமண், கார்பன் போன்றவற்றுடன் சேர்த்து கொதிக்க வைக்கிறார்கள். இதனால் எண்ணெய் அதன் இயல்பான நிறத்தை இழக்கிறது. அப்போது எண்ணெயில் உள்ள அசுத்தங்களுடன் இயற்கையான Anti Oxidants மற்றும் சத்துகளும் நீக்கப்படுகின்றன. கடைசியாக, எண்ணெய் மீது 500 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் செலுத்தப்படுகிறது. இதன்மூலம் எண்ணெயில் கலந்திருக்கும் ஆவியாகும் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன. பின்னர் ரசாயனங்கள் மூலம் வாசனையும், சுவையும் திணிக்கப்படுகிறது.

ஆரோக்கிய கேடு ஏற்படுவது ஏன்?  

இவ்வாறு கிடைக்கும் எண்ணெயில் அதிக அழுத்தத்தில் ஹைட்ரஜன் செலுத்துவதால், Fatty Acid ஆனது Trans Fat என்ற தீங்கு விளைவிக்கும் கொழுப்பாக மாறுகிறது. ரீஃபைண்டு ஆயிலில் PUFA (Poly Unsaturated Fatty Acid – ரசாயனம் கலந்த உறையாத கொழுப்பு) உள்ளது. இதை N3, N6 என இருவகையாக பிரிக்கிறார்கள். இதில் நமது நாட்டில் விற்கப்படும் ரீஃபைண்டு எண்ணெய்களில் உடலுக்கு வேண்டாத PUFA N6 அதிகம் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. உடல் பருமன், ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிப்பது, இதய நோய், நீரிழிவு பாதிப்பு, மார்பக புற்றுநோய் போன்றவற்றுக்கு இது முக்கிய காரணி என மருத்துவ உலகம் கூறுகிறது. அதிக வெப்பத்தில் எந்திரங்கள் மூலம் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுவதால், அது முழுமையான ரசாயனத் தன்மை கொண்டதாக மாறுவதும் ஆரோக்கிய கேடுக்கு முக்கிய காரணம்.  

ரீஃபைண்டு ஆயிலில் கெட்ட கொழுப்பை குறைப்பதாக விளம்பரம் செய்யப்பட்டாலும், நல்ல கொழுப்பையும் சேர்த்தே உற்பத்தியாளர்கள் குறைத்துவிடுகின்றனர். எண்ணெய்க்கு உரித்தான இயல்பை இழக்கச் செய்து, திரவ நிலைக்கு மாற்றி, ரசாயனங்கள் மூலம், வாசனை மற்றும் சத்துகளை ஏற்றி பிளாஸ்டிக் பைகள், புட்டிகளில் அடைத்து ரீஃபைண்டு ஆயிலானது சந்தைபடுத்தப்படும். இந்த வகை எண்ணெய், அடர்த்தியற்றது என்பதால் உட்கொள்ளும் அளவு அதிகமாகும். உடலில் நல்ல கொழுப்பு சேர்வதை தடுக்கும்.

எது நல்ல எண்ணெய்?

அடர்த்தியாக, கொழகொழப்புத் தன்மையுடன், நிறமும் மணமும் தூக்கலாக இருக்கும் செக்கு எண்ணெய்தான் ஆரோக்கியம் தரும் சத்துகள் நிறைந்தது. இதில் பல்வேறு வைட்டமின்கள் உள்ளன. இரும்புச் சத்து, துத்தநாகம், மெக்னீசியம், செம்பு, கால்சியம் ஆகியவை செக்கு எண்ணெயில் இயற்கையாக கிடைக்கின்றன. மூட்டுகள், இரைப்பை, குடல் இலகுவாக இயங்குதல், நரம்புகள், ரத்த நாளங்கள் திண்மை பெறுதல், தோல் மிருதுவாக வளையும் தன்மை பெறுதல், அத்தியாவசிய நொதிகள் உற்பத்தி போன்றவற்றுக்கு கொழுப்புச் சத்து தேவை. இது ஒரு டேபிள் ஸ்பூன், அதாவது 20 மில்லி செக்கு எண்ணெயில் கிடைத்துவிடும்.

மறு உபயோகம் வேண்டாம்  

அதிக வெப்பத்தில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தும்போது ஆக்சிஜன் அழுத்த மூலக்கூறுகள் அதிகம் உற்பத்தியாகி, மாரடைப்பு, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும்.

 குயின் ஆஃப் ஆயில்

உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே என்றார் திருமூலர். ‘வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்கு கொடு’ என்று கூறினர் முன்னோர்கள். எவ்வளவு தீர்க்கமாக யோசித்து சொல்லியிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய்தான் பயன்படுத்தப்பட்டது. நமது பாட்டன், பூட்டன்கள் 80, 90 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். நல்ல உணவுக்கு சுத்தமான எண்ணெய்தான் அடிப்படை. அதிலும் ‘குயின் ஆஃப் ஆயில்’ எனப்படும் நல்லெண்ணெய் உடலை உரமாக்கும். பாமாயில், சன்ஃபிளவர் ஆயில் உள்ளிட்ட ரீஃபைண்டு ஆயிலைத் தவிர்த்து, இயற்கையான  சத்துகள் நிறைந்த நமது பாரம்பரிய எண்ணெய் வகைகளை உணவில் சேர்த்து ஆரோக்கியம் பேணுவோம். இந்தியா 3-ம் தர பொருட்களுக்கான சந்தை அல்ல என்பதை நிரூபிப்போம்.

refined oil is get